தமிழ் மொழி புறக்கணிப்பு - ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம்
மத்திய அரசு வழங்கும் குடியரசு தலைவர் விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது ஆகியவற்றில், சமஸ்கிருதத்தை தங்கக்கட்டிலில் சீராட்டி தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “2018 ஆம் ஆண்டுக்கான, குடியரசு தலைவர் விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்குவதில், இந்தியாவின் மூத்த மொழியும், திராவிட மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழியும், உயர்தனிச் செம்மொழியுமான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இந்த விருதுகளுக்கான பெயர்களை பரிந்துரைக்கும்படி கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் சமஸ்கிருதம், பாலி/பிராகிருதம், அரபி, பாரசீகம், செம்மொழி அந்தஸ்து பெற்ற ஒடியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சிறந்த அறிஞர்களுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அதில் செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் இடம்பெறவில்லை என்பது, மத்திய அரசு தமிழ்மொழி மீது கொண்டுள்ள ஆழமான வெறுப்பையும், பாகுபாட்டு உணர்வையும் காட்டுகிறது.
தமிழ்மொழி மீது பற்றுள்ளவர்கள் போல, தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்கள் வெறும் வார்த்தைகளால் கபட நாடகம் ஆடுகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியோ “தமிழ் அழகான மொழி”, “பழமையான மொழி”, “அந்த மொழியில் வணக்கம் மட்டுமே எனக்கு சொல்ல முடிகிறது என்று வருந்துகிறேன்”, என்றெல்லாம் பேசி, தமிழ்மொழி மீது தனக்கு பாசம் இருப்பது போன்று வஞ்சப் புகழ்ச்சி பேசுகிறார். ஆனால், இவையெல்லாம் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவே என்பது தமிழ்மொழியைப் புறக்கணிக்கும் மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தெரிகிறது.
சமஸ்கிருதத்தை தங்கக் கட்டிலில் வைத்து சீராட்ட விரும்பும் மத்திய அரசு, இலக்கண - இலக்கிய வளம்செறிந்த மிகத்தொன்மை வாய்ந்த அன்னைத் தமிழுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஒவ்வொரு முறையும் மனசாட்சியின்றி - கூச்சமின்றி ஈடுபடுகிறது. குடியரசு தலைவர் விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதுகளில் செம்மொழி தமிழ் புறக்கணிக்கப்பட்டு இருப்பது, தமிழினத்திற்கு மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக செய்யும் மன்னிக்க முடியாத துரோகம்.
இதை எந்தவொரு தமிழனும் மன்னிக்கமாட்டான் என்பதையும் மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். வழக்கம்போல், தமிழ்மொழிக்கு நேரும் அவமானம் குறித்தெல்லாம் கவலைப்படும் நிலையில், இங்குள்ள தமிழக அரசும் இல்லை அல்லது மத்திய அரசைத் தட்டிக் கேட்கும் நிலையில் அதிமுக எம்பிக்களும் இல்லை என்பது தமிழகத்தின் மிக மோசமான வாய்ப்பாக அமைந்துள்ளது வேதனையளிக்கிறது.
ஆகவே, 2018 ஆம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவர் விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதுகளில் செம்மொழியாம் தமிழ்மொழியில் உள்ள சிறந்த அறிஞர்களுக்கும் விருது வழங்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உடனடியாக தனது சுற்றறிக்கையை திருத்தி வெளியிட்டு, தமிழ் மொழியிலிருந்து சிறந்த அறிஞர்களையும் விருது வழங்குவதற்கு அனுப்பி வைக்க, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தாமதமின்றி உடனடியாக கடிதம் எழுத வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com