ஓய்வு பெறுகிறது தோனிக்கு பிடித்த மோப்ப நாய் தோனி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் கொண்ட மோப்ப நாய் ஒன்று மொகாலி மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது. மொகாலியில் தோனி கிரிக்கெட் விளையாட வரும் போது, இந்த மோப்ப நாயுடன் கொஞ்சி விளையாடுவது வழக்கம்.
'லெப்ரடார்' ரகத்தைச் சேர்ந்த இந்த நாயுடன் சேர்த்து ஜான், ப்ரீத்தி என்ற இரு நாய்களும் மொகாலி போலீசில் 10 வருடங்களாக பணியாற்றி வருகின்றன. அகமது நகரில் இருந்து 3 மாத குட்டியாக கொண்டு வரப்பட்ட தோனி, பயிற்சிக்குப் பின் 2007ம் ஆண்டு மொகாலி போலீசில் இணைந்தது.
மொகாலியில் வரும் 13ந் தேதி நடைபெறவுள்ள இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போது, இந்த நாய்களுக்கு ஓய்வளிக்க மொகாலி போலீஸ் முடிவு செய்துள்ளது. இந்த நாய்களை ஏலம் விட போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆரம்ப விலை ரூ.800 ஆகும்.
2011ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய- பாகிஸ்தான் அணிகள் மொகாலியில் மோதின. இந்தப் போட்டியைக் காண, இரு நாட்டு பிரதமர்களும் அப்போது மொகாலி மைதானத்திற்கு வந்திருந்தனர். அந்த சமயத்தில், தோனி மைதானத்தை சுற்றி தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டது. வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதில் தோனி கில்லாடி!