திருநெல்வேலி : 41 வது வார்டில் நான்கு நாளில் பெயர்ந்த சாலை

திருநெல்வேலி மாநகராட்சி, என்.ஜி.ஓ. காலனி, பாரதி நகர் 41வது வார்டில் ராயல் மருத்துவமனை அருகே நான்கு நாட்களுக்கு முன்பு போடப்பட்ட புதிய தார் சாலை, தற்போது பெயர்ந்து வருவதால் சர்ச்சை வெடித்துள்ளது.

சாலை அமைக்கப்படும்போதே அறைகுறையாக, மேம்போக்காக பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், தற்போது சாலை பெயர்ந்தே விட்டது . மேலும், தங்கள் பகுதிக்கு முறையான, தரமான சாலை வசதி அமைத்து தர வேண்டும் என மாநகராட்சிக்கு மக்கள் கோரிக்கை விடுத்தும் பலனில்லாமல் போய் விட்டது.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா ஐ.ஏ.எஸ். அவர்களிடம் கேட்டபோது, "இது குறித்த தகவல் எனக்கும் கிடைத்துள்ளது. விசாரணை நடத்தி தவறுகள் நடந்திருந்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தரம் இல்லாமல் தார் சாலை போடும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.

மாநகராட்சி ஆணையரின் இந்த அறிவிப்பு, தரமற்ற பணிகளில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை நேர்மையாகவும், விரைவாகவும் நடந்து, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு

More News >>