திருநெல்வேலி : இளைஞரின் கால்களுக்கு இடையே சிலிண்டரை கட்டி கட்டையால் அடித்த கொடூரம் போலீசாரை பொளந்து கட்டிய மனித உரிமை ஆணையம்
திருநெல்வேலியில் காவல்துறை அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி டவுன், எண்ணாயிரம் பிள்ளையார் கோவில் மேற்கு வீதியைச் சேர்ந்த சந்திரா என்பவர் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், தனது மகன் பேச்சியவேலை போலீசார் தாக்கியது தொடர்பாக புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது,
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி எனது மகன் பேச்சிவேலை தேடி எங்கள் வீட்டுக்கு வந்தனர். எனது மகன் இல்லாததால் மளிகைகடையை சேதப்படுத்தி 10 ஆயிரம் இழப்பை ஏற்படுத்தினர். இது தொடர்பாக எனது இளைய மகன் காவல் ஆணையருக்கு புகார் அளித்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீண்டும் 15ம் தேதி இரவு சுமார் 9 மணிக்கு மீண்டும் வீட்டுக்குள் நுழைந்த காவல்துறை அதிகாரிகள் எனது மகன் பேச்சியவேலை வீதிக்கு இழுத்து வந்து தடியால் தாக்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். எனது மகனின் காலையும் உடைத்துள்ளனர். இரண்டு நாளாக சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்தனர். பின்னர், திருநெல்வேலி அரசுகு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஐயப்பன் என்பவர் அளித்த தவறான புகாரின் அடிப்படையில் போலீசார் இப்படி மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்' என்று கூறப்பட்டிருந்தது.
வழக்கில் காவல்துறை அதிகாரிகள் தங்கள் தரப்பில் விளக்கமளித்தனர். அதில், ராஜா என்பவரின் புகாரின் பேரில் பேச்சியவேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், அவரை கைது செய்யச் சென்றபோது, தப்பிக்க முயற்சித்து ஒரு பள்ளத்தில் குதித்து வலது காலில் காயம் ஏற்பட்டதாகவும், முதலுதவி அளித்த பின்னர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தனர். மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை . பேச்சியவேல் தனது வாக்குமூலத்தில் பள்ளத்தில் விழுந்து காயம் ஏற்பட்டதை ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தனர். பேச்சியவேல் மீது சுமார் 20 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவே இந்த தவறான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக வாதிட்டனர்.
ஆனால், மனித உரிமைகள் ஆணையம் விசாரித்த போது, பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. பின்னர், மனித உரிமைகள் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதாவது, டிசம்பர் 16ம் தேதி மாஜிஸ்திரேட் முன் பேச்சியவேல் ஆஜர்படுத்தப்பட்டபோது சப்-இன்ஸ்பெக்டர் விமலன் மற்றும் காவலர் மகாராஜன் எனது கண்களைக் கட்டி, எனது வலது காலில் சிலிண்டரை போட்டு, தடியால் உடல் முழுவதும் அடித்தனர்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார். காவல்துறை அதிகாரிகள்,பேச்சியவேல் பள்ளத்தில் குதித்து காயம் அடைந்தார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லை .
ஒரு குற்றவாளிக்கும் மனித உரிமைகள் உண்டு என்றும், அவர் மீது பல வழக்குகள் இருந்தாலும், காவல்துறையினர் அவரைத் தாக்கவோ அல்லது சித்திரவதை செய்யவோ அனுமதி இல்லை . காவல்துறையினர் சட்டத்தை மதிப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் சட்டம் ஒழுங்கின் பாதுகாவலர்கள்.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு, புகார்தாரரான சந்திராவுக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் . இந்த தொகையை பேச்சிவேலின் கால்களை உடைத்த மகாராஜன் மற்றும் விமலன் ஆகியோரிடமிருந்து தலா 2 லட்சம் வசூலிக்க வேண்டும் . சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.