ரஷ்யாவின் மிதக்கும் அணுமின் நிலையம்!

70 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை ரஷ்யாவின் ரோசடோம் கார்ப்பரேஷன் வடிவமைத்துள்ளது.. அகடமிக் லோமோன்சோவ் என்று பெயரிடப்பட்ட இந்த அணுமின்நிலையம், தானாக நகர முடியாதது. இதை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இரண்டு படகுகள் இழுத்துச் செல்லும்.

1974-ம் ஆண்டு நிறுவப்பட்ட பிலிபினோ என்ற 48 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய அணுமின்நிலையம், எழுபது ஆண்டுகளாக இயங்கி வரும் சௌன்ஸ்காயா அனல் மின் நிலையம் ஆகியவற்றின் மின்சார தயாரிப்பை ஈடு செய்யும் வண்ணம் அகடமிக் லோமோன்சோவ் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை, இம்மின்நிலையம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து முர்மான்ஸ்க் என்ற நகரை நோக்கி புறப்பட்டது. முர்மான்ஸ்க் நகரில் இதனை இழுத்துச் செல்லும் படகுகளுக்கு எரிபொருள் நிரப்பப்படும்.

அடுத்து முர்மான்ஸ்க் நகரிலிருந்து பேவெக் நகருக்கு 2019-ம் ஆண்டு இது செல்லும். பேவெக் நகரில் இம்மின்நிலையத்தின் மூலம் கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையம், பூமியிலிருந்து எண்ணெய் எடுக்கும் இயந்திரங்கள் மற்றும் நகரில் வசிக்கும் ஒரு லட்சம் மக்கள் மின்வசதி பெறுவர்.

அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படும்போது உருவாகும் அதிக வெப்பத்தினால் இதை சுமக்கும் படகு சேதமுற்று விபத்து நேர வாய்ப்பிருப்பதாக இதைக் குறித்து விமர்சனங்களும் இருக்கின்றன. தொலைதூர பகுதிகளுக்கு நிலவழியாக மின்சாரத்தை கொண்டு செல்வதைக் காட்டிலும், கடல் வழியாக நாட்டின் மேற்கு பகுதியிலிருந்து கிழக்குப் பகுதிக்கு மிதக்கும் அணுமின்நிலையத்தை கொண்டு செல்வது செலவு குறைவானது என்பதால் ரஷ்யா, இதை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>