கன்னியாகுமரி : கண்டுகொள்ளப்படாத குழந்தை போல தவிக்கும் அருவிக்கரை
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றியம் அருவிக்கரையில் பரளியாறு பரந்து விரிந்து செல்லும் இடம் ஆகும். இயற்கை எழில் கொஞ்சும் இங்கு தினமும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை.
குறிப்பாக பெண்கள் உடை மாற்றும் அறையோ, கழிப்பிட வசதிகளோ, குடிநீர் வசதியோ இங்கு ஏற்படுத்தப்படவில்லை. கடந்த 15 வருட காலத்திற்கு முன்பாக இந்த ஆற்றின் கரையோரப் பகுதியில் பல லட்சம் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு கழிப்பிட வசதி இருந்தது. காத்திருப்போர் அறை, சிறுவர் விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டது. ஆனால், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவே இல்லை.
சிறுவர் பூங்கா புதர்மண்டி கிடக்கிறது. அருகில் சிறுவர் விளையாட்டு சாதனங்கள் தொல்லியல் பொருள் போல கிடக்கின்றனள. இதன் பக்கவாட்டிலுள்ள பரளியாற்றின் கரையோர சுவர் இடிந்து விழும் நாளை எதிர்நோக்கியுள்ளது. கழிப்பிடங்கள் காட்சி பொருளாய் காட்சி அளிக்கின்றன. இங்கு படகு சவாரி விடுவதற்கும் உரிய ஏற்பாடுகள் நடந்ததாகவும், பெருவெள்ளத்தில் இங்கு நிறுத்திவைக்கப்பட்ட படகுகள் அடித்துச் சென்றதாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இங்கு கடந்த 2016ம் ஆண்டு மாவட்ட ஊராட்சி முகமை மூலம் ரூ 2 கோடி செலவில் கட்டப்பட்ட அணைக்கரை-அருவிக்கரை உயர்மட்ட பாலம் திறந்து வைக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் (2007-2008) ரூ 2.50 லட்சம் செலவில் காத்திருப்போர் அறை கட்டப்பட்டது. சுற்றுலா பயணிகள் வசதிக்காக உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்கப்பட்டது. இவை., முறையாக பராமரிக்கப்படாததால், அருவிக்கரை சுற்றுலா தலம் கண்டுகொள்ளப்படாத கைக்குழந்தை போல தவிக்கிறது.
எனவே, அருவிக்கரை பகுதியை முறையாக பராமரிக்க வேண்டுமென் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.