தேர்வுக்கு சென்ற மாணவர்கள் நெஞ்சில் சாதிப்பெயர் குத்திய அவலம்!
மத்தியப் பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் நடந்த காவலர்கள் வேலைக்கான தோ்வில் பங்கேற்றவர்களின் நெஞ்சில் அவர்களது சாதிப் பெயரை எழுதியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தார் மாவட்டத்தில் கடந்த சனி்க்கிழமையன்று காவலர்கள் வேலைக்கான மருத்துவத் தேர்வுகள் நடைபெற்றன. அதில் பங்கேற்றவர்கள் வரிசையாக மேல்சட்டையின்றி நிறுத்தப்பட்டனர். பின்னர் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் ஸ்கெட்ச் பேனாவினால் அவர்களின் சாதிப் பெயரும் அவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதும் எழுதப்பட்டது.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, தார் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் வீரேந்திர சிங் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் பற்றி அவர் கூறுகையில், “மருத்துவப் பரிசோதனையை நடத்தியவர்கள், பங்கேற்றவர்களை வகுப்பு வாரியாகப் பிரிப்பதற்காக இது போன்ற முறைகளைக் கையாண்டுள்ளனர். அவர்கள் வேறு வழிகளைக் கையாண்டிருக்கலாம். எனினும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com