உண்மையை ஏன் மறைக்கிறீர்கள்? - சாந்தா ஷீலா நாயரிடம் நீதிபதி கேள்வி

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது நடந்த அனைத்து சம்பவங்கள் குறித்து அனைத்து உண்மைகளையும் தெரிவிக்க மறுப்பது ஏன் என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு 22ஆம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அவரது உயிர் பிரிந்ததாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது.

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் விசாசரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த ஆணையத்தின் சார்பில் 35க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தா ஷீலா நாயர் மற்றும் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆனூர் ஜெகதீசன், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி அருகில் உள்ள லீலா ஐஓபி கிளை மேலாளர் லீலா செல்வக்குமாரி, பேங்க் ஆப் இந்தியா கிளை மேலாளருக்கும் ஆணையம் சம்மன் அனுப்பியது.

அதன்பேரில், சாந்தா ஷீலா நாயர், ஆனூர் ஜெகதீசன், செல்வக்குமாரி ஆகிய 3 பேர் மட்டும் நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர். அவர்கள் 3 பேரையும் தனி, தனியாக அழைத்து நீதிபதி விசாரணை நடத்தினார்.

சாந்தா ஷீலா நாயரிடம் நீதிபதி நடத்திய விசாரணையில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது 23ம் தேதி மருத்துவமனையில் சந்தித்ததாக சாந்தா ஷீலா நாயர் கூறியுள்ளார். அப்போது, ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தாராம்.

மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது நடந்தவை குறித்து எல்லா உண்மைகளும் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனாலும், ஏதோ ஒரு காரணத்திற்காக நீங்கள் கூற மறுக்கிறீர்கள் என்று கேட்டார்.

ஆனால், அதற்கு பதில் அளிக்காமல் மவுனமாக இருந்தார். மேலும், செப்டம்பர் 23ம் தேதிக்கு பின்னர் தன்னால் ஜெயலலிதாவை சந்திக்க இயலவில்லை எனவும் விசாரணையின் போது தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More News >>