24 மணி நேரமும் கடை திறக்க போலீசார் அனுமதிக்க வேண்டும் - நெல்லையில் விக்ரமராஜா பேட்டி
வியாபாரிகளிடத்தில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்வதை நிறுத்தி விட்டு புகையிலை உற்பத்தி செய்யப்படும் இடங்களில் தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா நெல்லையில் பேட்டி.
நெல்லை மாவட்டம் வேப்பங்குளம் பகுதியில் தனியார் கிரிக்கெட் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமாருடன் இணைந்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ' அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையை விற்பனை செய்யக்கூடாது என வணிகர்கள் தெளிவாக இருக்கிறோம். ஜிஎஸ்டி கட்டி அனுமதிக்கப்பட்ட புகையிலை மட்டுமே வாங்கி விற்பனை செய்யப்படுகிறது. புகையிலைகளை வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்வதை நிறுத்தி விட்டு உற்பத்தி செய்யப்படும் இடங்களில் அரசு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாமானிய வியாபாரிகளை பாதுகாப்பதற்கு சட்ட விதிமுறைகளை வகுக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளையும் வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கப்படவுள்ளது. இதனை ஏற்று யார் தீர்மானமாக கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு 2026 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆதரவளிப்போம்.
தமிழகம் முழுவதும் வணிகர்கள் சங்கங்களின் குடும்பங்களை சேர்ந்த ஒரு கோடி வாக்குகளை உள்ளடக்கியது வணிகர் சங்க பேரமைப்பு என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம். ஏற்கனவே தமிழகத்தில் வரி விதிப்பு அதிகமாக உள்ளதை தமிழக முதல்வரிடத்தில் சுட்டி காட்டியுள்ளோம். குடியிருப்புகளுக்கு 6 சதவீத வரி விதிப்பு உயர்வை ரத்து செய்ய வேண்டும் . வரிவிதிப்பு உயர்வு , லைசென்ஸ் புதுப்பிப்பு கட்டண உயர்வு உள்ளிட்டவைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். ஆன்லைனில் பொருள் வாங்கும் நிலையை மக்கள் புறந்தள்ள வேண்டும். அரசு ஆன்லைன் வர்த்தகத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக ஆன்லைனில் சில்லறையாக விற்பனை செய்து வருகின்றனர்.சட்டத்திற்கு புறமான ஆன்லைன் விற்பனைக்கு அதிகாரிகள் அனுமதி தந்தது எப்படி என்பது குறித்தான கேள்வி எழுந்துள்ளது 24 மணி நேரமும் கடை திறக்க அரசு அனுமதி அளித்திருந்த நிலையிலும் காவல்துறை அதிகாரிகள் அதை அமல்படுத்த மறுக்கின்றனர். அரசியல் கட்சிகளின் மாநாடு நடைபெறும் இடங்களில் கடைகளை மூட வலியுறுத்துவது தேவையற்ற செயல்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.