5ஜி... டி-மொபைலுடன் இணையும் ஸ்பிரிண்ட்
அமெரிக்காவை சேர்ந்த டி-மொபைல், ஸ்பிரிண்ட் இரு நிறுவனங்களும் இணைந்து ஒரே நிறுவனமாக இயங்குவதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
உலகமெங்கும் 2020-ம் ஆண்டு 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி அலைக்கற்றை காலகட்டத்தில் தொழில்நுட்ப வணிகத்தில் திறன்மிகு போட்டியாளராக விளங்கும் வண்ணம், இவ்விரண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்படும்.
உடன்பாடு எட்டப்படும்போது டி-மொபைலின் சந்தை மதிப்பு 55 பில்லியன் டாலர். ஸ்பிரிண்ட்டின் சந்தை மதிப்பு 25 பில்லியன் டாலர். இதற்கேற்ப புதிய நிறுவனத்தில், டி-மொபைலின் டியூட்ஸ்சே டெலிகாம் 42 சதவீத பங்குகளையும், ஸ்பிரிண்ட் நிறுவனத்தின் சாஃப்ட்பேங்க் 27 சதவீத பங்குகளையும் வைத்திருக்கும். எஞ்சிய 31 சதவீத பங்குகள் பொதுமக்களிடம் இருக்கும். அமெரிக்காவில் மொபைல் சேவையில் வெரிசோன் வயர்லெஸ், ஏடி&டி இரண்டையும் அடுத்து மூன்றாவது பெரிய நிறுவனமாக இப்புதிய நிறுவனம் விளங்கும்.
இரண்டு நிறுவனங்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள், புதிய நிறுவனத்தில் பணிபுரிவார்கள். ஆகவே, வேலைவாய்ப்பு கூடும். கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு நிறுவனங்களும் தனித்தனியாக செய்த முதலீடுகளை காட்டிலும் 46 சதவீதம் அதிக முதலீட்டை புதிய நிறுவனம் முதல் மூன்று ஆண்டுகளில் செய்ய இருக்கிறது.
புதிய நிறுவனம் டி-மொபைல் என்ற பெயரில், தற்போதைய டி-மொபைலின் தலைமை செயல் அதிகாரி ஜாண் லேகரின் தலைமையிலேயே இயங்கும். புதிய நிறுவனத்தின் தலைமையகம் வாஷிங்டனின் பெல்லேவிலும், இரண்டாவது தலைமையகம் தற்போதைய ஸ்பிரிண்ட்டின் தலைமையகமாக கன்சாஸின் ஓவர்லேண்ட் பார்க்கிலும் செயல்படும்.
"5ஜி காலகட்டத்தில் நுழையும் இத்தருணத்தில், இரண்டு நிறுவனங்களும் இணைந்த புதிய நிறுவனம் அலைக்கற்றை தொழில்நுட்பத்தில் புத்தம்புதிய, வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள, குறைந்த செலவிலான சேவையினை வழங்கும்," என்று ஜாண் லேகர் தெரிவித்துள்ளார்.
இந்த இணைப்புக்கு அமெரிக்காவின் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்க வேண்டும். கடந்த ஆண்டு ஏடி&டி மற்றும் டைம் வார்னர் நிறுவனங்களின் 85 பில்லியன் டாலர் அளவிலான இணைப்புக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்தது. ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கிடைத்தால், இப்புதிய நிறுவனத்தில் 12 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இருப்பார்கள்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com