தென்காசி, நெல்லையில் கடைகளில் அதிரடி சோதனை : எடைகுறைப்பு மோசடியில் ஈடுபட்டால் உரிமையாளர்களுக்கு சிறை!
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருள் விதிகளைப் பின்பற்றாத 30 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை தொழிலாளர் ஆணையர் ராமன் உத்தரவின் பேரில், நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் தலைமையில் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
பெட்ரோல் பங்குகள், நியாய விலைக் கடைகள், எரிவாயு உருளை கிடங்குகள் மற்றும் விநியோக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 27 நிறுவனங்கள் எடை குறைப்பு செய்துள்ளது தெரிய வந்தது . சில நிறுவனங்கள் எடையளவு கருவிகளை மறுபரிசீலனை செய்து சான்றிதழ் பெறவில்லை. சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் புனிதத் தலங்களில் உள்ள கடைகளில் பொட்டலப் பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டன. பொட்டலப் பொருட்களில் தயாரிப்பாளரின் பெயர், முழு முகவரி, தயாரிக்கப்பட்ட மாதம், வருடம், காலாவதி தேதி, நிகர எடை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை போன்ற விவரங்கள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட 3 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம், 30 வணிக நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் , 'வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் எடையளவு பொருட்கள் மற்றும் கருவிகளை உரிய கால இடைவெளியில் மறுஆய்வுக்குட்படுத்தப்பட்டு சான்றிதழ் பெற வேண்டும் . விற்பனைக்கு வைத்துள்ள பொட்டலப் பொருட்களில் தயாரிப்பாளர், பொட்டலமிட்டவர் அல்லது இறக்குமதியாளரின் பெயர், முழு முகவரி, பொருளின் பெயர், அதன் எடை, எண்ணிக்கை, தயாரித்த மாதம், வருடம் மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை உள்ளிட்ட அனைத்து குறிப்புகளும் கட்டாயம் இடம் பெற வேண்டும். விதிகளை மீறும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது உரிமையாளருக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.