உலகில் மின்வசதி இல்லாத ஐந்துபேரில் ஒருவர் இந்தியர்

“இந்தியாவிலுள்ள எல்லா கிராமமும் மின்வசதி பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பெரும்பகுதி மக்கள் இன்னும் மின்சார இணைப்பு பெறாமல் உள்ளனர். இணைப்பு பெற்றவர்களுக்கும் முறையான, போதிய மின்விநியோகம் கிடைக்கவில்லை என்றும் மின் வசதியின்மை, தயாரிப்பு துறையையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் என்றும் மூத்த பொருளாதார நிபுணர் ஷிலன் ஷா கூறியுள்ளார்.

அரசின் அறிவிப்பு ஒருபுறமிருக்க, யதார்த்த நிலை முற்றிலும் மாறானதாக இருக்கிறது. மின் இணைப்பு இருக்கும் எல்லா வீடுகளுக்கும் போதிய விநியோகம் இருக்கிறதா என்பது ஐயத்திற்குரியது என்று ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் வள மூத்த ஆராய்ச்சியாளர் அபிஷேக் ஜெயின் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு கிராமத்தில் பத்து சதவீத வீடுகள் அல்லது பொது நிறுவனங்கள் மின்னிணைப்பு பெற்றால், அந்த கிராமம் மின்வசதி பெற்ற கிராமமாக கணக்கிடப்படுகிறது. இக்கணக்குப்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் 18,000 கிராமங்கள் மின்வசதி பெற்றுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

சர்வதேச ஆற்றல் முகமையின் கணக்கெடுப்பின்படி, 2017-ம் ஆண்டில், உலகில் மின்வசதி இல்லாத ஐந்து பேரில் ஒருவர் இந்தியாவில் வசிப்பதாகவும், நாட்டில் 24 கோடி பேருக்கு மின்னிணைப்பு இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் மின்தேவைகளுள் மூன்றில் இரண்டு பங்கு நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கும் அனல் மின்சாரத்தால் பூர்த்தியாகிறது. இந்நிலையில் புதுப்பிக்கும் ஆற்றலை இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது. 2018-ம் ஆண்டில் இந்தியாவில் எல்லா வீடுகளும் மின்னிணைப்பு பெற்று விட வேண்டும் என்ற குறிக்கோளோடு அரசு மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கான போதிய கட்டமைப்பு வசதி இன்னும் எட்டப்படவில்லை என்பதே உண்மை.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>