ஜெ.வை பொது செயலாளர் ஆக்கியதில் எனக்கு முழு பங்கு உண்டு: திவாகரன்
எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து நான் அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறேன். ஜெயலலிதாவைப் பொதுச்செயலாளர் ஆக்கியதில் எனக்கு முழுப் பங்கு உண்டு என்று திவாகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு டிடிவி தினகரன் அணிக்கும் திவாகரன் அணிக்கும் மோதல்போக்கு அதிகரித்து வந்தது. இதனையடுத்து, இரு தரப்பும் மாறி மாறி அறிக்கைகள் விட்டுவந்தன. இதனையடுத்து அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த திவாகரன், அம்மா அணி என்ற பெயரில் செயல்படுவோம் என கூறியிருந்தார்.
அதன்படி, மன்னார்குடியில் அம்மா அணி என்ற பெயரில் அலுவலகத்தை திவாகரன் திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், “அணியில் இணைய யாருக்கும் அழைப்பு விடமாட்டேன். விருப்பம் உள்ளவர்கள் அணியில் இணைவார்கள். தினகரனால் இழுத்து மூடப்பட்ட அம்மா அணிக்கு புத்துயிர் அளித்துள்ளேன்" என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அம்மா அணியின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய திவாகரன், “சென்னையிலும் தலைமை அலுவலகம் ஒன்று திறக்கப்படும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கையின்படி சசிகலா வழிகாட்டுதலுடன் இந்த அமைப்பு செயல்படும். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து நான் அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறேன். ஜெயலலிதாவைப் பொதுச்செயலாளர் ஆக்கியதில் எனக்கு முழுப் பங்கு உண்டு.
தினகரனின் செயல்பாடுகள் அனைத்தும் பொய், புரட்டுகளாக உள்ளன. சட்டசபை என்பது கோயிலைப் போன்றது. அங்கு பொய் பேசாமல் தனித்துவமாக செயல்படுங்கள் என்று ஆலோசனை வழங்கினேன். அதை தினகரன் ஏற்கவில்லை. குடும்ப அரசியல் கூடாது என்கிறார். குடும்பம் இல்லாமல் அவர் எங்கிருந்து வந்தார்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com