தூத்துக்குடி: கேஸ் இருந்தும் பாஸ் வரல... நீதிபதியே இல்லாத ஓட்டப்பிடாரம் நீதிமன்றம்!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் 2022 ம் ஆண்டு முதல் புதிய நீதிமன்றம் இயங்கி வருகிறது. புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், மணியாச்சி, எப்போதும் வென்றான், உள்ளிட்ட 10 போலீஸ் ஸ்டேஷன் வழக்குகள் வருகின்றன. சிவில்,கிரிமினல் வழக்குகள் ஆகிய இரண்டையும் விசாரிக்கும் ஒருங்கிணைந்த நீதிமன்றம் இது.
இந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ஜெயந்தி, சமீபத்தில் ஆலங்குளத்திற்கு மாற்றப்பட்டார். ஆனால், புதிய நீதிபதி ஓட்டப்பிடாரத்திற்கு நியமிக்கப்படவில்லை.
பொறுப்பு நீதிபதியாக தூத்துக்குடி ஜெ.எம்..1 மாஜிஸ்திரேட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், மற்றொரு நீதிமன்றத்தையும் கூடுதலாக பார்த்துக் கொள்கிறார். எனவே வாரத்தில் ஒரு நாள் மட்டுமே அவரால், ஓட்டப்பிடாரம் வந்து செல்ல முடிகிறது.
ஓட்டப்பிடாரத்தில் தற்போது 1500 குற்ற வழக்குகள், 450 க்கும் மேற்பட்ட சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிபதி இல்லை என்றாலும் வாய்தா தேதி மட்டும் நீதிமன்ற ஊழியர்களால் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஓட்டப்பிடாரத்துக்குட்பட்ட 10 போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகளில் கைதாகும் நபர்களை போலீசார், தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று நீதிபதியிடம் ஆஜர்படுத்தி சிறையில் அடைகின்றனர். இதனால் 10 ஸ்டேஷன் போலீஸாரும் அலைக்கழிக்கப்படுகிள்றனர்.
இதுகுறித்து ஓட்டப்பிடாரம் வக்கீல்கள் சங்கத் தலைவர் மரகதவேல் கூறுகையில், மிகவும் பின்தங்கிய பகுதியான ஓட்டப்பிடாரத்திற்கு தான் நீதிபதி நியமனத்தில் முக்கியத்துவம் தர வேண்டும். நீதிபதி இல்லாமல் போலீசார், வழக்கறிஞர்கள் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர் என்கிறார்.