வங்கி ஊழியரை தாக்கிய நெல்லை திமுக கவுன்சிலர் உள்பட 9 பேர் மீது வழக்கு

நெல்லை அடுத்த பெருமாள்புரம், என்.ஜி.ஓ. 'ஏ' காலனியைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 47). இவர் நெல்லை டவுனில் உள்ள ஒரு வங்கியில் தலைமை கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இந்த வங்கியில் பழைய பேட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (62) கணக்கு வைத்திருந்தார். வங்கியில் லாக்கர் சம்பந்தமாக குமரேசனுக்கும், ரவிச்சந்திரனுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

கடந்த 5ம் தேதி குமரரேசன் வங்கியில் இருந்த போது, அங்கு சென்ற ரவிச்சந்திரன், தனது மகனும் திருநெல்வேலி மாநகராட்சி கவுன்சிலருமான அஜய்யின் பெட்ரோல் பங்குக்கு வரும்படி அழைத்தார். இதையடுத்து அங்கு வங்கிமேலாளர் சீனிவாசன் என்பவருடன் குமரேசன் சென்றார். அப்போது பெட்ரோல் பங்கில் இருந்த கவுன்சிலர் அஜய் (32), அவருடைய நண்பர்கள் 7 பேர் சேர்ந்து குமரேசனை அவதூறாக பேசி தாக்கியுள்ளனர். கொலைமிரட்டலும் விடுத்தனர். குமரேசன் கூச்சலிடவே ரவிச்சந்திரன் உள்ளிட்ட 9 பேரும் தப்பி சென்றனர். காயமடைந்த குமரேசன் பாளையங்கோட்டை அரசு மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், ரவிச்சந்திரன், அஜய் உள்ளிட்ட 9 பேர் மீது பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

More News >>