பூமிதாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர் பேராசை பிடித்த குவாரி உரிமையாளர்கள்- சென்னை உயர்நீதிமன்றம் சாட்டையடி
கோவை மாவட்டத்தில், புரவிபாளையம் கிராமத்தில் கே.டி.செந்தாமரை என்பவர் பட்டா நிலங்களில் 2009-ம் ஆண்டு முதல் குவாரிகளை நடத்தி வருகிறார். இவரது குவாரிகளில் விதிமீறல் இருப்பதாக ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் தொடர்ந்தார். இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின் படி அமைக்கப்பட்ட குழு 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையில் சிறிய அளவில் விதிமீறல் இருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடிக்கபட்டது.
ஆனால், இந்த அறிக்கையை மறு ஆய்வு செய்த கோவை சப்-கலெக்டர், குவாரியில் இருந்து சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுத்ததாக கூறி செந்தாமரைக்கு 32 கோடியே 29 லட்சத்து 77 ஆயிரம் அபராதம் விதித்தார். இதை எதிர்த்து புவியியல் மற்றும் சுரங்கத் துறை கமிஷனரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை கமிஷனர், சப்-கலெக்டர் உத்தரவை ரத்து செய்தார். அபராதத் தொகை ரூ.2 கோடியே 48 லட்சத்து 9 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை கமிஷனரின் உத்தரவை, தாமாக முன்வந்து இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் விசாரித்தார். கமிஷனர் உத்தரவை ரத்து செய்தும், கோவை சப்-கலெக்டர் விதித்த அபராதத் தொகையை உறுதி செய்தும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தாமரை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி விசாரித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சம்மந்தப்பட்ட குவாரிகளில் இருந்து கற்கள், கிராவல் மண் எவ்வளவு எடுக்கப்பட்டுள்ளன? என்ற அட்டவணையே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அட்டவணையில் உள்ள விவரங்களை மனுதாரர் எதிர்க்கவில்லை. மனுதாரருக்கு 5 குவாரிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முறையான உரிமம் இல்லாமல் கற்களும், கிராவல் மண்ணும் எடுத்துள்ளார். இந்த குற்றத்துக்காக அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும் வகையில் சட்டப்பிரிவுகள் உள்ளன. கோவை சப்-கலெக்டர் சரியான அபராதம் விதித்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டமே, நேர்மையற்ற பேராசைக்காரர்களிடம் இருந்து பூமித்தாயை காப்பாற்றுவதற்காகத்தான் கொண்டு வரப்பட்டது. ஆனால், தீராத பேராசைக்காரர்களான குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அந்த துறை கமிஷனரின் இந்த செயலும் அதிர்ச்சி அளிக்கிறது. அவருடைய உத்தரவு மனசாட்சி உள்ள ஒருவரால் புரிந்துக் கொள்ளவும், கற்பனை செய்யவும் முடியாத அளவில் உள்ளது என்று ஆதங்கத்தை வெளியிட்டார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரத்திலும் ஏராளமான குவாரிகள் செயல்பட்டு வருகின்ற. இந்த குவாரி உரிமையாளர்களுக்கு முடிவு கட்டுவது எப்போது என்கிற கேள்வி ராதாபுரம் மக்களின் கேள்வியாக உள்ளது.