குடிபழக்கம் கொண்ட தந்தை... மகனின் விபரீத முடிவு
நெல்லையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான தந்தையை திருத்துவதற்காகவும், டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும் வாலிபர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அதிகளவில் இருப்பதன் காரணமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. இதனால் குடும்பங்கள் சீரழிந்து வருகிறது.டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி ஆங்காங்கே போராட்டங்களும் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், நெல்லை சங்கரன் கோவில் அருகே குருக்கள்பட்டியைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் தினேஷ் (17) என்பவர் ரயில்வே மேம்பாலத்தில் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டான். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தினேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, தினேஷின் சட்டை பையில் இருந்து கடிதம் மற்றும் நீட் தேர்வுக்கான அனுமதி சீட்டும் இருந்தது.
அந்த கடிதத்தில், “மதுபோதைக்கு அடிமையான என் தந்தையை திருத்த முடியாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன். என் உடலுக்கு தந்தை இறுதிச்சடங்கு செய்யக்கூடாது. என் சாவுக்கு பிறகாவது தமிழக முதல்வர் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும்” என்றிருந்தது.வாலிபரின் இந்த உருக்கமான கடிதம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com