வாசுதேவநல்லூர் தகாத உறவில் ஈடுபட்டு கணவருக்கு முடிவு கட்டிய பெண்ணுக்கு ஆயுள்
வாசுதேவநல்லூரில் தகாத உறவு காரணமாக ஏற்பட்ட தகராறில் கணவரை கொலை செய்த மனைவி உட்பட 3 பேருக்கு தென்காசி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பசும்பொன் இரண்டாம் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது 45) இவரை கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் முதல் காணவில்லை என்று வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. க்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு, கருப்பசாமியின் மனைவி மகேஸ்வரிக்கும் அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்ற மாரிச்சாமிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்த கருப்பசாமி மனைவி மகேஸ்வரி, மாரிச்சாமி இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேஸ்வரியும் மரியப்பனும் கருப்பசாமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கு மகேஸ்வரியின் தந்தை வீரப்பன், பொன்ராஜ் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். தொடர்ந்து, நான்கு பேரும் சேர்ந்து கருப்பசாமியை கொன்று புதைத்துள்ளனர்.
இதையடுத்து, போலீசார் நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி ராஜவேலு இன்று அளித்த தீர்ப்பில் கூறியதாவது, கருப்பாசாமியை 4 பேரும் திட்டமிட்டு கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆயுள் தண்டனை விதிப்பதாக தெரிவித்தார்.
மகேஸ்வரியின் தந்தை வீரப்பன் ஏற்கனவே இறந்து விட்டார்.