குழந்தைகளுமா ஆபாசமாக ஆடை உடுத்துகின்றன? - ரஞ்சித் கேள்வி
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் ஒழுங்காக ஆடை அணியவில்லை என்கிறார்கள். குழந்தைகளும்தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு ஆடை காரணமாக இருக்கிறதா என்று இயக்குநர் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் துவக்க விழா தொழிலாளர் தினமான மே 1 அன்று சென்னை ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் பா.ரஞ்சித், பி.சி.ஸ்ரீராம், சத்யராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், "பெண்கள் ஏதோ ஒரு உறவு முறையில் மாட்டிக்கொண்டு ஒடுக்கப்படுகிறார்கள். அதையும் தாண்டி சில பெண்கள் ஒடுக்குதலை எதிர்க்கிறார்கள், அவர்களின் வெளிப்பாடாகத்தான் இந்தச் சங்கத்தை நான் பார்க்கிறேன்.
வீட்டை விட்டு வெளிவரும் பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள். சமீபத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணைப் பற்றி வந்த விமர்சனம் என்னவென்றால் அவள் ஒழுங்காக ஆடை அணியவில்லை என்கிறார்கள்.
குழந்தைகளும்தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு ஆடை காரணமாக இருக்கிறதா, இல்லை அதன் நடத்தை காரணமாக இருக்கிறதா. பெண்கள் மீது நடக்கும் பாலியல் கொடுமைக்கு அவர்கள்தான் காரணம் என்று சொல்வது இயல்பாக ஏற்றுக்கொள்ளும் வடிவமாகிவிட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த வடிவத்தை உடைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com