திருநெல்வேலியில் சாலைப் பணியாளர்கள் கண்களில் கருப்புத் துணிக்கட்டி நூதனப் போராட்டம்

திருநெல்வேலியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர்  திருநெல்வேலியில் கண்களில் கருப்புத் துணிக்கட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ஏற்காத நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் முதலமைச்சர் பல்கலைக்கழகங்களின் வேந்தராகப் பொறுப்பேற்றார்.  அதேபோல் ,சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, தங்களின் 41 மாத பணி நீக்க காலத்தைப் பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், "நீதிமன்றத் தீர்ப்புகளில் தங்களுக்குச் சாதகமானவற்றை மட்டும் அரசு எடுத்துக்கொண்டு செயல்படுகிறது. அரசுக்கு எதிரான தீர்ப்புகளைக் கண்டுகொள்வதில்லை. அவற்றை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது. இதனால் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயர் நீதிமன்றத் தீர்ப்பை மதித்து எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சங்க நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்போம் ' என்கின்றனர். 

உயர் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி, பாளையங்கோட்டை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம்,  முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் நேற்று மாலை கண்களில் கருப்புத் துணிக்கட்டி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்தில் சங்க தலைவர் சுந்தரபாண்டி, கோட்டச் செயலாளர் நாராயணன், துணைத் தலைவர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாநிலச் செயலாளர் யூசுப் ஜான் பேசினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சுப்பு, மாவட்டச் செயலாளர் பிரகாஷ், மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், மருந்தாளுநர் சங்கத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் உட்படப் பலர் கலந்துகொண்டு பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி நிறைவுரையாற்றினார். சங்கக் கோட்டப் பொருளாளர் முருகன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் காலங்கரையான், ஐயப்பன், முருகன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

 

More News >>