திருநெல்வேலி மாவட்ட பாஜக துணைத் தலைவர் கைது: கந்து வட்டி, வீட்டை பறித்த வழக்கில் அதிரடி
கந்து வட்டி விவகாரத்தில் திருநெல்வேலி மாவட்ட பாஜக மாவட்ட துணைத் தலைவர் மேகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மேலப்பாளையம் சேவியர் காலனியைச் சேர்ந்த டென்னிசன் (36) மற்றும் அவரது மனைவி பிரின்சி (30). இவர்கள் அந்த பகுதியில் சிட்பண்ட் நடத்தி வருகின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு, தொழில் வளர்ச்சிக்காக டென்னிசன் தச்சநல்லூரைச் சேர்ந்தவரும், பாஜக மாவட்ட துணைத் தலைவருமான மேகநாதனிடம் ரூ. 20 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இந்த கடனுக்கு நாள் ஒன்றுக்கு டென்னிசன் 20 ஆயிரம் வட்டி செலுத்தியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக டென்னிசனின் சிட்பண்ட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட போதிலும், அவர் தினசரி கந்து வட்டியான ரூ. 20 ஆயிரம் செலுத்தி வந்துள்ளார். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக தினசரி வட்டியைக் கட்டுவதில் டென்னிசன் சிரமப்பட்டுள்ளார். எனினும், 30 நாட்களுக்குரிய வட்டியில் 20 நாட்களுக்கான ரூ. 4 லட்சத்தை கட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மேகநாதன், இரண்டு மாதங்களுக்கு முன்பு டென்னிசன் வீட்டிலிருந்த காரை பறிமுதல் செய்துள்ளார். மேலும், டென்னிசனின் மனைவி பிரின்சியை மிரட்டி, வீட்டை அடமானமாகப் பெற்றுக்கொண்டதாகப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார்.
இதுமட்டுமல்லாமல், நேற்று முன்தினம் (ஜூன் 12) மேகநாதன் தனது சிலருடன் டென்னிசனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். வீட்டில் இருந்த பொருட்களை வெளியே வைத்துவிட்டு, மேகநாதன் தான் கொண்டு வந்த பொருட்களை வீட்டிற்குள் வைத்துள்ளார். பின்னர், அங்கிருந்தவர்களை மிரட்டி வெளியேற்றி, வீட்டிற்குப் பூட்டுப் போட்டுவிட்டுச் சென்றுள்ளார். இதனால், டென்னிசனும் அவரது குடும்பத்தினரும் தங்க இடமின்றி தவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நெல்லை மாநகர கிழக்கு மண்டல துணை ஆணையர் வினோத்சாந்தாரமிடம் டென்னிசன் தம்பதி புகார் மனு அளித்துள்ளனர். புகாரை விசாரித்த துணை ஆணையர், மேகநாதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மேலப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் செந்திலுக்கு உத்தரவிட்டார். ஆய்வாளர் செந்தில் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, கந்து வட்டி, அவதூறாகப் பேசியது, மிரட்டல், வீட்டை பூட்டியது, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து , பாஜக மாவட்ட துணைத் தலைவர் மேகநாதனைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மேகநாதனை, நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்னால் உடல் பரிசோதனைக்காக, நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பாளையங்கோட்டை சிறையில் அடைக்க போலீசார் முயற்சித்தபோது, மேகநாதன் நெஞ்சுவலிப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்த மேக நாதனை, போலீசார் பொய் வழக்கு போட்டு அடைப்பதாக திருநெல்வேலி பாஜக பிரமுகர்கள் அரசு மருத்துவமனையில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.மேகநாதன் மீது நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். புகார் கொடுத்த டென்னிசன், பாஜக பிரமுகர் மேக நாதனிடம் 20 லட்ச ரூபாய் வாங்கியதற்கு 40 லட்சம் வரை பணம் கொடுத்ததாக போலீசில் கூறியுள்ளார்.