தயவு செய்து பேசுங்கள் - அமிதாப் பச்சனுக்கு பிரகாஷ் ராஜ் கோரிக்கை
நீங்கள் ஒரு பெரிய மனிதர்; உங்கள் குரலுக்கு அதிக மதிப்புள்ளது; தயவு செய்து பேசுங்கள் என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது முகநூலில் பதிவு ஒன்றை பிரகாஷ் ராஜ், வெளியிட்டுள்ளார். அதில் “நீங்கள் ஒரு பெரிய மனிதர்; உங்கள் குரலுக்கு அதிக மதிப்புள்ளது; தயவு செய்து பேசுங்கள்; பேசாமல் இருப்பதற்கு வயதும் முதுமையும்தான் காரணம் என்று பொய்யான காரணத்தை மட்டும் கூறி விடாதீர்கள்.
சமூகம் ஆபத்தில் இருந்தபோது நீங்கள் ஏன், அமைதி காத்தீர்கள்? என்று எதிர்காலத் தலைமுறை உங்களைப் பார்த்து கேட்டுவிடக் கூடாது. நீங்கள் கவிதைகள் அறிந்த அற்புத மனிதர்; உங்கள் குரல் இப்போது தேவைப்படுகிறது; உங்களிடமிருந்து யாரும் எதையும் எடுத்துச் செல்ல முடியாது; மாறாக நீங்கள்தான் பலரைக் காப்பாற்றி வருகிறீர்கள்.
நாட்டில் நடக்கும் சம்பவங்களை கேட்கும் போதெல்லாம் நான் உடைந்து போகிறேன். இந்த நேரத்தில் நீங்கள் உதவி புரியவில்லை எனில் அது சரியாக இருக்காது; துயருக்கு உள்ளானவள் எனது மகள் அல்லது யாருடைய மகளாகவும் இருக்கலாம்; அதை மனத்தில் கொண்டாவது நீங்கள் கொஞ்சம் வாயைத் திறந்து பேச வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com