திருநெல்வேலி : ஆடி காரில் ஆட்டம் போட்டவர்கள் கைது ... காரும் போச்சா சோனமுத்தா!
திருநெல்வேலி: திருநெல்வேலி - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில், நாங்குநேரி டோல்கேட் அருகே பானாங்குளத்தில் நேற்று மாலை நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆடி சொகுசு கார்களில் பயணித்த மூன்று பேர் காரின் மேல் அமர்ந்து கொண்டு பயணம் செய்தது சக வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கினர். இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில், மேற் கூரையில் அமர்ந்து கொண்டு அவர்கள் பயணிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
நான்கு வழிச்சாலையில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு மத்தியில், இந்த அலட்சியமான பயணம் மேற்கொண்டவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போலீசாருக்கும் , சட்டத்துக்கும் எந்த பயமும் இல்லாமல் இளைஞர்கள் இத்தகைய ஆபத்தான செயலில் ஈடுபடுவதை தடுக்க கடும் நடவடிக்கை அவசியம் என்றே தோன்றுகிறது. இப்படி, பயணிப்பது அவர்களுக்கு மட்டுமல்ல மற்ற வாகன ஓட்டிகளுக்கும் இவர்களால் இடையூறும் அச்சமும் அல்லவா ஏற்படுகிறது என்பதை உணராதது துரதிஷ்டவசமாகவே பார்க்கப்பட்டது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் இச்செயலைக் கண்டித்து "இது என்ன புதுவிதமான ஆபத்தான செயல்? சட்டத்தை மதிக்காமல் இப்படி செய்பவர்களை சும்மா விடக்கூடாது" என கருத்து தெரிவித்தனர்.
சமூக ஆர்வலர்கள், "இளைஞர்கள் சாகசம் செய்ய விரும்பினால், மலையேற்றம் அல்லது ஜிம்னாஸ்டிக் போன்ற வழிகளைத் தேர்ந்தெடுக்கலாம். சாலையில் இதுபோன்று செய்வது மிகவும் ஆபத்தானது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.
அதைத்தொடர்ந்து நாங்குநேரி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இளைஞர்னகள் ஏறி ஆட்டம் போட் ஆடி காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், காரின் மேற்கூரையில் அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொண்ட இரண்டு இளைஞர்களையும் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்தநிலையில்,இந்த காரில் சாகசத்தில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகரைச் சேர்ந்த பிரபு (வயது 32) மற்றும் இசக்கிராஜ் (வயது 26) என அடையாளம் காணப்பட்டனர். தொடர்ந்து, இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், போக்குவரத்து விதிமீறல்களிலும் ஈடுபட்டதாகக் கூறி இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எதிர்காலத்தில் இளைஞர்கள் இப்படி, சாகசத்தில் ஈடுபட்டால், கடும் தண்டனைக்குள்ளாவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.