ஜம்போ சர்க்கஸ் தொடக்கம் உன்னத கலைஞர்களின் உயிர் போராட்டம் : நெல்லை மக்களே ஆதரவளியுங்கள்!
இந்தியாவின் புகழ்பெற்ற சர்க்கஸ் நிறுவனங்களில் ஒன்றான ஜம்போ சர்க்கஸ், பாளையங்கோட்டையில், மாவட்ட நீதிமன்றம் எதிரேயுள்ள காமராஜ்நகர் மைதானத்தில் நேற்று (ஜூன் 14) முதல் தொடங்கியது.
ஜெமினி சர்க்கஸின் ஒரு அங்கமாக, ஜம்போ சர்க்கஸ் நிறுவனம் 1977 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் தொடங்கப்பட்டது. தற்போது, 75-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் , கலைஞர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். தரமான சாகசங்களுக்காக நாடு முழுவதும் அறியப்பட்ட இந்த சர்க்கஸ், தறபோது திருநெல்வேலியில் முகாமிட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி நேற்று ஜம்போ சர்க்கஸின் முதல் காட்சியை தொடங்கி வைத்தார். துணை மேயர் ராஜூ மற்றும் மண்டல தலைவர் பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சர்க்கஸ் நிறுவன மேலாளர்களான வர்க்கீஸ் மற்றும் ராஜூ ஆகியோர் விருந்தினர்களை வரவேற்றனர்.
ஜம்போ சர்க்கஸ் தினமும் பிற்பகல் 1 மணி, மாலை 4 மணி மற்றும் இரவு 7 மணி என மூன்று காட்சிகளாக நடத்தப்படவுள்ளது. பார்வையாளர்கள் BookMyShow இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாகவும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். சர்க்கஸ் நடைபெறும் மைதானத்தில் கார் பார்க்கிங் வசதிகள் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சர்க்கஸ் நிகழ்ச்சியில் குதிரைகள் மற்றும் நாய்களின் பிரமிக்க வைக்கும் சாகசங்கள்,கண்கவர் பார் விளையாட்டுகள், விறுவிறுப்பான சைக்கிள் ரேஸ், வேடிக்கையான பப்ஃபூன் நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. குழந்தைளை கவரும் வகையில் அனைத்து நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன. அழிந்து வரும் சர்க்கஸ் கலைக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென சர்க்கஸ் கலைஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.