பாளையங்கோட்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு தீ வைத்த மருமகன் கைது
பாளையங்கோட்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு தீ வைத்த மருமகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் காவலர் காலனியை சேர்ந்தவர் பாக்கியராஜ். ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவரின் மகள் அருகே ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சப் இன்ஸ்பெக்டரின் மகளுக்கும் அவரின் கணவர் காசிமுத்து என்பவருக்கும் குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. நேற்று மாலையில் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த காசிமுத்து, பிரச்னைக்கு காரணம் பாக்கியராஜ் தான் என்று கருதியுள்ளார். எனவே, பாக்கியராஜிடம் பேச வந்துள்ளார். அப்போது, தான் பாட்டிலில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை எடுத்து பாக்கியராஜின் வீட்டுக்கு தீ வைத்தார்.இதில் வீட்டின் ஒரு அறை தீப்பற்றி எரிந்தது. அங்கு இருந்த சோபா, கட்டில் உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகின.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. சம்பவம் குறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக அங்கு சென்று தீயை அணைத்தனர். தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிமுத்துவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.