நெல்லையில் அதிரடி: போதை பஸ்  டிரைவர்களுக்கு ரூ.10 ஆயிரம்  அபராதம்

நெல்லையிலிருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்குச் செல்லும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பணி நேரத்தில் மது அருந்துவதைத் தடுக்கும் வகையில், நெல்லை மாநகரப் போக்குவரத்து போலீசார் நேற்றிரவு அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். புதிய பேருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே நடைபெற்ற இந்தச் சோதனையில், தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தீவிர மது பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். 

நெல்லை மாநகரப் போக்குவரத்து உதவி ஆணையர் அசோக் குமார், சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகப் பேசினார். அப்போது அவர், "யாருக்கும் தெரியாமல் சிறிதளவு மது அருந்திவிட்டுப் பேருந்து இயக்கிவிடலாம் என நினைக்கக் கூடாது. பேருந்தில் ஏறியவுடன் மதுவின் வாடை பின் சீட் வரைக்கும் தெரியும். உங்களுக்கு உடல் சோர்வாக இருந்தால், பத்து நாட்கள் வரை கூட விடுப்பு எடுத்து ஓய்வெடுங்கள். ஆனால், கண்டிப்பாகப் பணி நேரத்தில் மது அருந்தக் கூடாது. நெல்லையிலிருந்து தினமும் சுமார் 40 தனியார் பேருந்துகள் வெளியூர்களுக்குச் செல்கின்றன. இனி அனைத்துப் பேருந்துகளும் தினமும் இரு  இடங்களில் நிறுத்தி பரிசோதனை செய்யப்படும். சோதனையில் மது அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டால், அவர்களுக்கு வேறு எங்கும் வேலை கிடைக்காத சூழ்நிலை ஏற்படும். எனவே, ஓட்டுநர்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பயணிகளைப் பத்திரமாக அழைத்துச் சென்று, பத்திரமாகத் திரும்பி வாருங்கள்" என்று அறிவுறுத்தினார்.

இந்தத் திடீர் சோதனையைப் பேருந்து பயணிகள் உட்படப் பலரும் நேரில் பார்த்த பயணிகள் பெரும் வரவேற்பு தெரிவித்தனர். தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மத்தியில் இந்தச் சோதனை ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.சோதனை தொடர்ந்து நடத்தப்படும் எனப் போக்குவரத்து போலீசார் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

More News >>