நீட் தேர்வு முடிவுகள்: மருத்துவ கனவு கேள்விக்குறியாகிறதா?

திருநெல்வேலி :

அண்மையில் வெளியான நீட் தேர்வு முடிவுகள், இந்திய மருத்துவக் கல்வித் துறையில் ஒரு முக்கிய சவாலை எழுப்பியுள்ளன. நாட்டில் எம்பிபிஎஸ் படிப்புக்கு ஒரு லட்சத்து 18 ஆயிரம் மருத்துவ இருக்கைகள் மட்டுமே உள்ள நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வில் 12.36 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளதால், அனைவருக்கும் டாக்டர் கனவு சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீட் தேர்வின் தாக்கம்:

இந்தியாவில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால், தற்போது தேர்வு எழுதுபவர்கள் மற்றும் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மே மாதம் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதிய நிலையில், இவர்களில் சுமார் 12.36 லட்சம் பேர் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மருத்துவ இருக்கைகள் பற்றாக்குறை:

அதேநேரத்தில், இந்தியாவில் 2025-26 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 190 எம்பிபிஎஸ் இருக்கைகள் மட்டுமே உள்ளன. இதில், எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் போன்ற முன்னணி மருத்துவக் கல்லூரிகளும் அடங்கும். தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கைக்கும், இருக்கைகளின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளி, பலரின் மருத்துவக் கனவை எட்டாக் கனியாக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாட்டின் நிலை:

மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இருக்கைகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. மாநிலத்தில் உள்ள 75 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பயில்வதற்கு 11 ஆயிரத்து 850 இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வில் 76 ஆயிரத்து 181 பேர் தகுதி பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இங்குள்ள இருக்கைகளில் 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் மத்திய ஒதுக்கீடு 15 சதவீதம் ஆகியவையும் அடங்கும்.

*தேர்ச்சி விகித மாற்றங்கள் மற்றும் எதிர்காலப் போக்கு:*

கடந்த ஆண்டு நீட் தேர்வில் 13.15 லட்சம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது 12.36 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் சற்று குறைந்ததற்கு இயற்பியல் பாட வினா கடினமாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இருக்கை எண்ணிக்கையை விடப் பல மடங்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதால், அவர்களுக்கு இடம் கிடைப்பது "குதிரைக் கொம்பு" என்ற நிலையே ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்த வரும் ஆண்டுகளில் இத்தேர்வை எழுதுபவர்களின் ஆர்வம் குறையலாம் என்ற கருத்தும் கல்வியாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

அதிக எண்ணிக்கையிலான நீட் பயிற்சி மையங்களின் வருகை மற்றும் அரசு சார்பில் வழங்கப்படும் நீட் இலவசப் பயிற்சி போன்ற காரணங்களால் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

மாற்று வழிகள் மற்றும் ஆலோசனை:

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்த்த மருத்துவ இருக்கை கிடைக்காவிட்டால் மனம் தளர வேண்டாம் என்று கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். மருத்துவத் துறையில் பல் மருத்துவம், நர்சிங், பாரா மெடிக்கல் போன்ற பல கல்வி வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா போன்ற படிப்புகளும் காத்திருக்கின்றன. வசதியுள்ள மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவக் கல்வி பயிலவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, மருத்துவக் கனவு எட்டப்படாவிட்டாலும், வேறு பல உயர் கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்தி சாதனை படைக்க முயற்சிக்கலாம் என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

More News >>