தமிழகத்தில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது
தமிழகத்தில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது என்பதால் வரும் நாட்களில் கோடை வெயில் மேலும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே தமிழகத்தில் பல மாவட்டங்கள் செஞ்சுரி அடித்து வருகிறது. திருத்தணி மற்றும் வேலூர் மாவட்டங்களில் அதிகபட்சம் 109 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதேபோல், சென்னை, நெல்லை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் வெளியின் உக்கிரம் அதிகரித்து காணப்படுகிறது.
கோடை வெளியிலுக்கு இடையே விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், திண்டிவனம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மிதமான மழை பெய்தது. இதனால் இங்கு வெப்பம் தணிந்தது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: வடக்கு திசை காற்றும் தெற்கு திசை காற்றும் சந்திக்கின்ற பகுதி, தமிழகத்தின் உள் மாவட்டம் வழியே செல்வதால் கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்துள்ளது.
இன்றும் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்யும். வெப்பச் சலனம் காரணமாக வேலூர், சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை பெய்யும். அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெப்பம் அதிகரிக்கும். இதனால், மக்கள் வீட்டைவிட்டு வெயியே செல்வதை தவிர்க்கவும். அப்படி வெளியே செல்ல வேண்டும் என்றால் குடை, தண்ணீர் பாட்டிலை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com