டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருநெல்வேலியில் இன்று நெல்லை - கோவை அணிகள் மோதல்

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், நெல்லை சங்கர் நகரில் உள்ள மைதானத்தில் இனறு (சனிக்கிழமை) நெல்லை அணியும் கோவை அணியும் மோதுகின்றன. இந்த போட்டி மாலை தொடங்குகிறது.

கடந்த ஜூன் 5-ம் தேதி தொடங்கிய டி.என்.பி.எல். போட்டியில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதுவரை நடந்த போட்டிகளில் நெல்லை அணி 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது. மறுபுறம், கோவை அணி 4 போட்டிகளில் விளையாடி இன்னும் வெற்றி கணக்கைத் தொடங்கவில்லை.

இதனால், இன்று நடைபெறும் போட்டியில் கோவை அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ய முனைப்புடன் இருக்கிறது.போட்டி குறித்து நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் கூறுகையில், "நெல்லை மக்களின் ஆதரவு எங்களுக்கு எப்போதும் உண்டு. நெல்லையில் விளையாடும் போது எங்களுக்கு ஒரு புத்துணர்வு கிடைப்பது போல் உணர்கிறோம். இரு ஆண்டுகளுக்கு முன்பு, முறை இறுதிப் போட்டி வரை வந்தோம்.

எங்கள் அணிக்கு இந்த மைதானம் ராசியானது. தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் அதை கணித்து விளையாட எங்கள் அணியில் மூத்த வீரர்கள் பலர் உள்ளனர். மற்ற ஊர்களில் உள்ள மைதானங்களில் ஒப்பிடும்போது இந்த மைதானத்தில் புல் அருமையாக இருக்கிறது. இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த மைதானத்தில் சிறப்பாக விளையாடும் போது பேட்ஸ்மேன்களுக்கு ஒரு நன்மதிப்பை பெற்றுத் தரும்" என்று தெரிவித்தார்.

கோவை அணி கேப்டன் ஷாருக்கான் கூறுகையில்," கடந்த ஆட்டங்களில் சந்தித்த தொடர் தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்து நடக்கும் போட்டிகளில் அதிக ரன் ரேட்டுடன் வெற்றி பெறும் பட்சத்தில் அட்டவணையில் நாங்களும் முன்னிலைக்கு வருவோம். இந்த முறை இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். கிரிக்கெட் விளையாட்டுக்குத்தான் முக்கியத்துவம், வெற்றி தோல்விக்கு இல்லை. அணியில் பெரிய அளவில் வீரர்களை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. தற்போது நாங்கள் விளையாடும் முறையையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்" என்று கூறினார்.

More News >>