`தலை துண்டிக்கப்படும் - போலீசாருக்கு இன்ஸ்டாகிராமில் நாங்குநேரி இளைஞர் மிரட்டல்
நெல்லை போலீசாருக்கு இன்ஸ்டாகிராமில் மிரட்டல் விடுத்த நாங்குநேரி வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் இரு பிரிவினருக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் பரப்பப்படும் சர்ச்சை பதிவுகளை நெல்லை மாவட்ட போலீசார் உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மூலைக்கரைப்பட்டி போலீசார் சமூக வலைதளங்களை ஆய்வு செய்தபோது இன்ஸ்டாகிராம் ஐடி ஒன்றில் வாலிபர் ஒருவர், ``ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, அந்த படத்தில் இருந்த நபரை போலீசார் கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதற்கு காரணமான போலீசாரின் தலை துண்டிக்கப்படும்'' என பதிவிட்டிருந்தார்.
இதை கவனித்த மூலைக்கரைப்பட்டி போலீசார், சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் அந்த இன்ஸ்டாகிராம் ஐடிக்கு சொந்தமானவரை தேடினர். இதில் அந்த மிரட்டல் பதிவை வெளியிட்டவர் நாங்குநேரியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் வான்முத்து என்பது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். வான்முத்து ஏதாவது சதித்திட்டம் தீட்டி வருகிறாரா அல்லது போலீசாரை மிரட்டி பதிவிட வேறு ஏதாவது காரணமா? என விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.