நெல்லை: 16 வயது சிறுமியுடன் காதல் மகன் கைது செய்யப்பட்டதால், தந்தை ஆத்திரத்தில் ரகளை
திருநெல்வேலியில் 16 வயது சிறுமியைக் காதலித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் சூர்யா (வயது 20). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் சிறுமியைக் கண்டித்துள்ளனர்.பெற்றோரின் கண்டிப்பால் ஆத்திரமடைந்த சிறுமி, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில், காணாமல் போன 16 வயது சிறுமி சூர்யாவுடன் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பாளையங்கோட்டை காவல்துறையினர் சிறுமியை பத்திரமாக மீட்டு, பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மகளிர் காவல்துறையினர் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், சூர்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று (ஜூன் 22) கைது செய்தனர்.
தனது மகன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதை அறிந்த சூர்யாவின் தந்தை மாடசாமி, கடும் ஆத்திரமடைந்தார்.ஆத்திரத்தில், சிறுமியின் வீட்டிற்குச் சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது
இதற்கிடையே, 16 வயது சிறுமியின் பாதுகாப்பு கருதி, அனைத்து மகளிர் காவல்துறையினர் அவரை ஒரு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.