பாளையங்கோட்டை மரங்களில் ஆணி அடிக்காதீர்... களமிறங்கி தன்னார்வ தொண்டு நிறுவனம்

"என்னது மரங்களுக்கு ஆபத்தா? வாங்க உடனடியா போகலாம்!" என்ற முழக்கத்துடன், திருநெல்வேலி பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.ஏ. காலனி பகுதியில் உள்ள மரங்களில் புதைந்திருந்த கம்பி வேலிகள் மற்றும் ஆணிகளை அகற்றும் சிறப்புப் பணியை தன்னார்வ அமைப்பு மேற்கொண்டுள்ளது. மரங்களை பாதுகாக்கும் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதுகுறித்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் நிவேக் மற்றும் சபரிவாசன் ஆகியோர் கூறியதாவது "நகரத்திற்குள் இவ்வளவு பசுமையான தெருக்களா என அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு, என்.ஜி.ஓ.ஏ. காலனியில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. ஆனால், இந்த மரங்கள் அனைத்தும் 10 முதல் 15 ஆண்டுகள் வயது கொண்டவை. இந்த மரங்களின்கழுத்தை நெரிக்கும் அளவுக்கு இறுக்கமாகப் பழைய வேலிகளும் சுற்றி படர்ந்துள்ளன.

இந்தக் கம்பிகளை வெளியே எடுக்க பிரத்தியேக கருவிகளைப் பயன்படுத்துகிறோம். பல வருடங்களாக இந்தக் கம்பிகள் பூமிக்குள்ளும் மரத்துக்குள்ளும் புதைந்திருந்ததால் அவற்றை அகற்றுவது மிகவும் சிரமமாக இருந்தது. மேலும், இந்தக் கம்பிகள் மரங்களுக்கு நிறைய காயங்களையும் ஏற்படுத்தியிருந்தன.

என்.ஜி.ஓ.ஏ. காலனியில் முதல் குறுக்குச் சந்தில் இருந்து ஆரம்பித்து கடைசி தெரு வரை, காலை முதல் மாலை வரை ஏறத்தாழ 60க்கும் மேற்பட்ட மரங்களில் இருந்த கம்பி வேலிகள் மற்றும் அடிக்கப்பட்டிருந்த ஆணிகள் பிடுங்கப்பட்டன.இனிவரும் காலத்தில் இந்தப் பணி நகரம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் . மரங்களை பாதுகாக்க அக்கறை கொண்டவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம்.

மரங்களை உயிர்களைப் போன்று நினைக்க வேண்டும். மரங்களில் விளம்பர பதாகைகளை வைப்பதும், ஆணிகளை அடிப்பதும், பிளாஸ்டிக் பலகைகளைத் தொங்க விடுவதும், கேபிள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களின் கட்டுவதும் சட்ட விரோதம் மட்டுமன்றி மரத்தின் ஆயுளைக் குறைக்கும் காரணிகள் என்றனர்.

More News >>