நெல்லையில் ஓட்டுநர்களாக மாறும் திருநங்கைகள்...
திருநங்கைகளுக்கு ஆதார் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களில் பெயர், முகவரி திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, 28 திருநங்கைகளுக்கு கார் ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்கான அனுமதி கடிதங்களும் வழங்கப்பட்டன.
மாவட்ட சமூக நல அலுவலர் தன்ஷிகா பேகம் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி மற்றும் திருநங்கைகள் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் சுந்தர கனி ஆகியோர் கலந்து கொண்டு திருத்தப் பணிகளை செய்து கொடுத்தனர்.
இந்த முகாமில் 75 திருநங்கைகள் கலந்து கொண்டு தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற அடையாள அட்டைகளில் தேவையான திருத்தங்களைச் செய்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 28 திருநங்கைகளுக்கு கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான பயிற்சி, சமூக நலத்துறை மூலம் வழங்கப்படவுள்ளது. இதற்காகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேற்று பயிற்சிக்கான அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சி முடிந்ததும், வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தரப்படும் . இந்த முயற்சி திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.