மேலப்பாளையம்: படிக்காததை கண்டித்ததால், தலையில் கல்லைப்போட்டு தந்தையை கொன்ற கல்லூரி மாணவர்
நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த மேல கருங்குளம் அசோகபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 45). கூலி தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா. இந்த தம்பதிக்கு தங்கபாண்டி(19) என்ற மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். மாரியப்பன் கூலி வேலைக்கு சென்று வந்தார். மகன் தங்கபாண்டி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியில் இளங்கலை வரலாறு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
தங்கபாண்டிக்கு சரிவர படிப்பு வரவில்லை. மேலும் அவர் சரியாக படிக்காமல் சுற்றித்திரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மாரியப்பன் மகனை நன்றாக படி என்று கூறி கண்டித்துள்ளார்.இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பும் தங்கபாண்டியை சரியாக படிக்கவில்லை என்று கூறி மாரியப்பன் சத்தம்போட்டதாகவும், இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, தங்கபாண்டி ஒருவித மன அழுத்தத்தில் இருந்ததோடு , தந்தை மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்
இந்நிலையில் நேற்று இரவு குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றனர். மாரியப்பன் வீட்டின் முன்பகுதியில் உள்ள வராண்டாவில் படுத்தருந்தார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டுக்குள் உறங்கி கொண்டிருந்தனர்.
இந்த சமயத்தில் தந்தை மீது ஆத்திரத்தில் இருந்த தங்கபாண்டி இன்று அதிகாலை 2 மணியளவில் பாறாங்கல்லை தூக்கி வந்து தந்தை மாரியப்பன் தலையில் போட்டுவிட்டு ஓடிவிட்டார். அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த சகுந்தலா, கதவை திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, மாரியப்பன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை கண்டு பதறி போனார. ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னரே, மாரியப்பன் இறந்து விட்டார்
மேலப்பாளையம் போலீசார் தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்தனர். பின்னர்,மாரியப்பன் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தங்கபாண்டியை தேடி வந்தனர். அப்போது, வெளியூருக்கு தப்பித்து செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பதுங்கியிருந்த தங்கபாண்டியை தனிப்படையினர் பிடித்து மேலப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அவரிடத்தில் விசாரணை நடக்கிறது.