திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தால் நடக்கும் நன்மைகள் என்ன? ஜோதிடர்கள் விளக்கம்
திருச்செந்தூர் கோயிலில் காலை 6:10 மணிக்கு மேல் 6:47 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்துவதே மக்களுக்கும் ,அரசுக்கும் நன்மை தருமென நெல்லையை சேர்ந்த பிரபல ஜோதிடர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜூலை 7ம் தேதி நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நல்ல நேரம் குறித்து, நெல்லை மாவட்ட பட்டயம் மற்றும் பட்டதாரி ஜோதிடர் சங்க நிறுவனத் தலைவர் சங்கர சுப்பிரமணியன், துணைத் தலைவர் சந்தோஷ் சுப்பிரமணியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
' திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வருகிற ஜூலை 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. திருச்செந்தூரில் ஜூலை 7ம் தேதி காலை 6 மணி 8 நிமிடத்துக்கு சூரியன் உதிக்கிறது. எனவே, 6 .10 நிமிடத்தில் இருந்து 6 . 47 நிமிடங்களுக்குள் கும்பாபிஷேகம் நடத்துவது மிகச் சிறப்பானது.
குரு ஸ்தலமாக திருச்செந்தூர் கோவில் விளங்குகிறது. கடவுளுக்கு செய்ய வேண்டிய பணிகள் முற்பகலில் செய்வது சாலச் சிறந்ததாகும். பகல் 12 மணிக்கு மேல் செய்வது என்பது பிற்பகலாக மாறிவிடும். அந்த நேரத்தில் செய்வது அரசுக்கும் மக்களுக்கும் உகந்தது அல்ல. கோயில் நிர்வாகம் நீதிமன்ற வழிகாட்டுதலுடன் குறித்தபடி, காலை 6 மணிக்கு மேல் 6.47 மணிக்குள் நடத்துவது நல்லது .இந்த கும்பாபிஷேகத்தால் 4 லட்சம் தோஷங்கள் நீங்கும். பக்தர்களுக்கும் அரசுக்கும் நல்லது நடக்கும்' என்றனர்.