நெல்லை மாநகராட்சி புதிய கமிஷனர் பதவியேற்பு... கடமையில் மூழ்கிய பழைய கமிஷனர் சுகபுத்ரா
திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனராக இருந்த சுகபுத்ரா, விருதுநகர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் மோனிகா ரானா, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றார். இவர், நெல்லை மாநகராட்சியின் முதல் ஐ.ஏ.எஸ்.,பெண் கமிஷனர் ஆவார். நேற்று அவர் பதவியேற்ற போது, நெல்லை மேயர் ராமகிருஷ்ணன் அல்வா கொடுத்து வரவேற்றார்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தவர். கடந்த 2018 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வானார். சேலத்தில் பயிற்சி கலெக்டர் நீலகிரியில் சப் கலெக்டராக பணியாற்றினார். பின்னர், 2023 - முதல் 2025 ஜூன் வரை மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கூடுதல் கலெக்டராக இருந்தார்.
விருதுநகர் கலெக்டராக பதவி உயர்வு பெற்ற சுகபுத்ரா நேற்று முன்தினம் சென்னையில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற பின்னர், இரவோடு இரவாக திருநெல்வேலிக்கு வந்தார். நேற்று புதிய கமிஷனர் மோனிகா ரானா பதவி ஏற்று கொண்டு இருந்த சமயத்தில் மற்றொரு ஹாலில் அமர்ந்து பழைய கோப்புகளை பார்த்து சுகபுத்ரா கையெழுத்துப் போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார்.