திருநெல்வேலி அனைத்து அணைகளும் நிரம்பும் நிலை... மணிமுத்தாறுவில் குளிக்க தடை

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக, அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. கனமழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து பெருமளவு அதிகரித்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் நேற்று பெய்த கனமழையால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இன்று (ஜூன் 26) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதே போல, களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இன்று (ஜூன் 26) முதல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

அம்பாசமுத்திரம் வனக்கோட்ட துணை இயக்குநர் / வனஉயிரின காப்பாளர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வனத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகளின் நீர் மட்டம் எவ்வளவு?

* பாபநாசம் அணை: 134.25 அடி (மொத்த கொள்ளளவு 143 அடி)* மணிமுத்தாறு அணை: 95.98 அடி (மொத்த கொள்ளளவு 118 அடி)* சேர்வலாறு அணை: 138.94 அடி (மொத்த கொள்ளளவு 156 அடி)

பாபநாசம் அணைக்கு தற்போது வினாடிக்கு 2790 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் இந்த அணைகளின் மொத்த கொள்ளளவில் 57% நீர் இருந்தது. இந்த ஆண்டு தற்போதே 75% நீர் இருப்பு உள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

More News >>