தென்காசியில் ஒரு கீரை கட்டு ரூ.100... அரசு மருத்துவமனை ஊழலால் சென்னைக்கு பறந்த மனு!
தென்காசி மாவட்டம் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மகேஷ் பாண்டியன், சென்னை சுகாதாரத்துறை செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, 'தென்காசி மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தின் கீழ் 9 மருத்துவமனைகள் உள்ளன. இங்கு, 3 வேளையும் நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது .தென்காசி மாவட்ட இணை இயக்குநரின் கட்டுப்பாட்டிலுள்ள புளியங்குடி, சங்கரன்கோவில், சிவகிரி, கடையநல்லூர், செங்கோட்டை மருத்துவமனைகளில் ஒரு கீரைக்கட்டு ரூ்.100க்கு வாங்கியுள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர். தென்காசி சுற்றுவட்டார சந்தைகளில் ஒரு கீரைக்கட்டு 20க்கு கிடைக்கிறது. ஆனால், நான்கு மடங்கு அதிகமாக பணம் கொடுத்து கீரை வாங்கியது தெரிய வந்துள்ளது. 50, 60, 70, 80 ரூபாய்க்கு கீரை வாங்கியதாகவும் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்களின் வரிப்பணத்தை மருத்துவத்துறை ஊழியர்கள் வரை முறை இல்லாமல் கொள்ளையடித்துள்ளது தெரிய வந்துள்ளது.. தென்காசி மாவட்டம் முழுவதும் பல ஆண்டுகளாக கீரை ஊழல் நடந்துவருகிறது .ஆர்.டிஐ. வழியாக நான் பெற்ற அனைத்து தகவர்களையும் இத்துடன் இணைத்துள்ளேன். எனவே, இந்த மருத்துவமனைகளில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த கீரைக்கட்டு ஊழல் மற்றும் உணவு பொருட்கள் கொள்முதல்கள் கணக்கை ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில், தென்காசி சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்த ஸ்ரீபத்மாவதி, இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனைக்க மாற்றப்பட்டார். அங்கு, போலி ஆவணம் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்ட பத்மாவதி கடந்த மே 30ம் தேதி பணி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் ஒன்பது அரசு மருத்துவமனைகளில் 5 ஆண்டு நடந்த நோயாளிகளின் உணவுக்கு கீரை கொள்முதலில் நடந்த ஊழல் குறித்த விசாரணை தொடங்கியுள்ளது. ஆனால், சென்னை மேல் மட்ட அதிகாரிகளுக்கு பதிலாக தென்காசி மருத்துவமனைகளில் பணிபுரியும் அதிகாரிகளைக் கொண்டே விசாரணை நடந்து வருகிறது. இதனால், உண்மை வெளிவருமா? என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.