சபாஷ் சிவந்திப்பட்டி போலீஸ்.. போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஆரம்பப் பள்ளியில் இருந்தே தொடக்கம்
தமிழகம் முழுவதும் போதை ஒழிப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று அரசுத் துறை சார்பில் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் ஒரு படி மேலே சென்று, ஆரம்பப் பள்ளி மாணவர்களிடமிருந்தே போதை ஒழிப்பு விழிப்புணர்வைத் தொடங்கியுள்ளனர். நொச்சிக்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சிறிய கிராமமான பற்பகுளத்திலுள்ள அரசு உதவிபெறும் தொடக்க பள்ளியில் இந்த விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது.இன்றைய சூழ்நிலையில் போதைப்பொருள் பழக்கம் இளம் வயதினரையும், ஏன் குழந்தைகளையும் கூடப் பாதிக்கும் அபாயமுள்ளது. இதனால், ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மழலைச் செல்வங்களிடமிருந்து போதை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சிவந்திப்பட்டி காவல் ஆய்வாளர் சுதா இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளார்.
பேரணியில் பற்பகுளம் பக்தவத்சல ஆரம்பப் பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். "போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்" என்ற கோஷங்களை எழுப்பியபடி குழந்தைகள் ஊர்வலமாகச் சென்றதை கண்டு மக்கள் வியந்தனர்.
பேரணியின் முடிவில், சிவந்திப்பட்டி காவல் ஆய்வாளர் திருமதி. சுதா, போதையால் ஏற்படும் கடுமையான உடல்நலக் கேடுகள் மற்றும் சமூக சீரழிவுகள் குறித்து குழந்தைகளுக்கம் எளிமையாக புரியும் வகையில் எடுத்துரைத்தார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பக்தவத்சல பள்ளி ஆசிரியர்கள், நொச்சிக்குளம் பஞ்சாயத்து தலைவர் வேலம்மாள் ஸ்ரீனிவாசன் உட்படப் பல முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை சிவந்திப்பட்டி உதவி ஆய்வாளர் முத்துபாண்டி மற்றும் காவலர்கள் செய்திருந்தனர்.
ஆரம்பப் பள்ளியிலிருந்தே போதை ஒழிப்பு விழிப்புணர்வைத் தொடங்கிய சிவந்திப்பட்டி காவல்துறையினருக்கு நிச்சயமாக ஒரு சபாஷ் போடலாம்.