காங்கிரஸ்னா சும்மா இல்லை... போராட்டம்னா இறங்கிட்டா நெருப்புடா.. அவசரமாக இலந்தைகுளம் ஓடிய அதிகாரிகள்!
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை இலந்தைகுளம் பகுதியில், கழிவுநீர் ஓடையை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நூதனப் போராட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் மாநகராட்சி அதிகாரிகளை அவசர அவசரமாகச் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டன.ர
இலந்தைகுளப் பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடை நீண்ட நாட்களாகத் தூர்வாரப்படாமலும், கரைகள் சிதிலமடைந்தும் காணப்பட்டது. இதனால், அப்பகுதியில் கடுமையான கொசுத்தொல்லை ஏற்பட்டது. துர்நாற்றமும் வீசியது.இது குறித்துப் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் கட்டிச மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் ஒரு நூதனப் போராட்டத்தை அறிவித்திருந்தார். அதாவது, கழிவுநீர் சாக்கடையை உடனடியாகச் சுத்தம் செய்யாவிட்டால், அந்தச் சாக்கடைக்குள்ளேயே கட்டிலைப் போட்டு படுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நூதனப் போராட்ட அறிவிப்பு மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தெரியவரவே, அவர்கள் உடனடியாக உஷாராகினர். போராட்டத்திற்கு முன்னதாகவே, மாநகராட்சி ஊழியர்கள் இயந்திரங்களின் உதவியுடன் கழிவுநீர் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் அவசர அவசரமாக ஈடுபட்டனர்.
இதனிடையே, ஏற்கனவே அறிவித்தபடி காங்கிரஸ் கட்சியினர் சங்கரபாண்டியன் தலைமையில் இலந்தைகுளத்தில் திரண்டனர். கழிவுநீர் ஓடையால் ஏற்படும் கொசுத்தொல்லையை சுட்டி காட்டும் விதமாக, அவர்கள் அனைவரும் கும்பலாகக் கொசு வலைகளைப் போர்த்திக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலன் சார்ந்த சுகாதாரப் பணிகளை முறையாகவும், விரைவாகவும் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.