பாளையங்கோட்டையில் பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு: நான்கு மணி நேரத்தில் கொள்ளையன் கைது
பாளையங்கோட்டையில் இன்று காலையில் பெண்ணிடம் இருந்து 10பவுன் தங்க சங்கிலியை பறித்தவன் . 4 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டான்.
பாளையங்கோட்டை, மனக்கஞ்சா நாயனார் தெருவைச் சேர்ந்த ஆஷா (59) என்ற பெண் காலை 5 மணியளவில் சீவலப்பேரி சாலையிலுள்ள தேவாலயத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். சம்பா கடாய் தெரு அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஆஷா அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினான்.
தகவல் அறிந்ததும், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் மற்றும் குற்றப் பிரிவு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனடியாக ,அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளர் சந்தோஷ் ஹதி மனியின் உத்தரவின் பேரில், கொள்ளையனை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, கொள்ளையில் ஈடுபட்டது பாளையங்கோட்டையைச் சேர்ந்த கணேசன் (55) என்று அடையாளம் காணப்பட்டது
தொடர்ந்து, மாவட்ட சிறப்புப் படையினர் கணேசனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவனிடமிருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி அப்படியே மீட்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையாளர் வினோத் சாந்தாரம் தலைமையிலான தனிப்படை, சம்பவம் நடந்த நான்கு மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து, திருடப்பட்ட நகையை மீட்டுள்ளனர். தற்போது, பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர்கள் காசி பாண்டியன் மற்றும் பொன்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் கணேசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையின் இந்த துரித நடவடிக்கை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.