உரத்தை விவசாய பணிகளை தவிர வேறு எதற்கும் பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் தண்டனை - நெல்லை வேளாண் அதிகாரி எச்சரிக்கை
கங்கைகொண்டானில் இருந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு 1460.7 டன் யூரியா விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தென்மேற்கு பருவ மழையையோட்டி தென்மாவட்டங்களில் விவசாய பணிகளை தொடங்கி நடந்து வருகிறது. இதனால் பயிர்களுக்கு தேவையான யூரியா உரத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து விவசாயிகளுக்கு உரம் தடையின்றி கிடைக்க வேளாண் அதிகரிகள் நடவடிக்கை எடுத்தனர்.அதன்படி சென்னையில் இருந்து தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாக்குமரி மாவட்டங்களுக்குத் தேவையான யூரியா உரம் கங்கைகொண்டானுக்கு ரயிலில் வந்திறங்கியது. இந்த உர மூட்டைகள் நெல்லை மாவட்ட வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் சந்திரபோஸ், விற்பனைபிரிவு அதிகாரி குணாலன் முன்னிலையில் மாவட்ட வாரியாக யூரியா உரம் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த உரங்கள் லாரிகள் மூலம் அந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்திற்கு அதிகபட்சமாக 446.715 டன் உரமும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 338.985 டன் உரமும் வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு 438.75 டன் உரமும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு 236.25 டன் உரமும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 1460.7 டன் யூரியா உரங்கள் விவசாயிகளுக்காக உர விற்பனை நிலையங்களுக்கு சென்றடைந்துள்ளன.
உரங்கள் சரியான நேரத்தில் கிடைத்திருப்பதால் விவசாயிகள் தங்கள் விவசாயப் பணிகளை குறித்த காலத்தில் மேற்கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சீரான உர விநியோகம் தென்மாவட்ட விவசாய உற்பத்தியை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை மாவட்ட வேளாண் தரக்கட்டுபாடு உதவி இயக்குனர் சந்திரபோஸ் கூறுகையில், தற்போது யூரியா உரம் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து சொசைட்டிகளுக்கு தேவையான உரங்கள் விரைவில் அனுப்பப்படும். யூரியா உரத்தை பொறுத்தவரை ஒரு மூட்டைக்கு ரூ.1000 மானிய விலையில் அரசு வழங்குகிறது.
இதை ரூ.266க்கு விற்பனை செய்ய வேண்டும். ஆனால் சில இடங்களில் ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பதாக தகவல் வருகிறது. அதோடு பிளைவுட், டையிங் தொழிற்சாலைகளுக்கும், கால்நடைகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் யூரியா உரம் சட்டவிரோதமாக விற்பதாக புகார்கள் வருகின்றன. இத்தகைய தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளன. என எச்சரித்துள்ளார்.