ஸ்ரீவைகுண்டம் : வருங்கால முதல்வர் பண்ணையார்... கூவிய தொண்டரால் புன்சிரிப்பில் நயினார் நாகேந்திரன்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி காணொளி காட்சி மூலம் நடந்தது. இதில் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அப்போது, அங்குள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். இந்த சமயத்தில், கூட்டத்தில் இருந்த கட்சி நிர்வாகி ஒருவர். ' வருங்கால முதல்வர் பண்ணையார் ' கோஷமிட்டார். கோஷத்தை கேட்ட, நயினார் நாகேந்திரன் வேகமாக திரும்பி சிரித்தபடி' வேண்டாமே 'என்று கையை காட்டினார். இதனால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது. பின்பு, கால்வாய் கிராமத்தில் பாஜக கொடியை ஏற்றி அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி மரக்கன்றுகள் நட்டார்.
நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், 'சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக கூடுதல் சுமையாக இருக்கும் என சீமான் கூறியது குறித்து கேட்டதற்கு, சுமை இல்லாத கட்சி எது என்பதையும் அவரே விளக்கமாக கூறி இருக்கவேண்டும். யார் சுமை, யார் சுமை இல்லை என்பது குறித்து சீமான் விளக்கமாக கூற வேண்டும். நடிகர் விஜயிடம் நான் ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே ஓர் அணியில் திரள வேண்டும் என்று கூறியுள்ளேன். நான் நேற்று முதல் ஓர் கோஷத்தை ஆரம்பித்திருக்கிறேன். வேண்டாம் இனி திமுக வேண்டாம் என்பதுதான் அது.
இந்த கோஷத்தின்அடிப்படையில் எல்லோரும் சிந்தனை செய்ய வேண்டும். நாட்டில் நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகள் அளவில்லாதது, காவல்துறையினர் கர்ப்பிணி பெண்ணை கூட துன்புறுத்துகின்றனர். போதை மருந்து ஆறாக பாய்கிறது. இதனை கருத்தி கொண்டு தான் வேண்டாம் இனி திமுக வேண்டாம் என்ற தாரக மந்திரத்தை தேர்தல் வரை எடுத்துச் செல்லவுள்ளோம்.
மதுரையில் இந்து முன்னணி நடத்திய மாநாட்டில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.. இந்த மாநாடு தமிழ்நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும். வரும் 2026 ஆம் ஆண்டு ஆலமரமாக எல்லோருக்கும் பயன் தரும். எல்லோருக்கும் நிழல் தரும் அரசாங்கமாக புதிய அரசு 2026ம் ஆண்டு அமையும். தாமிரபரணி நதியை தூய்மை படுத்துவதில் எங்களுக்கு எந்தவிதமான மாற்றுக்கருத்தும் கிடையாது. இந்த நதியை தூய்மைப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததா? நிதி கேட்டதா? தமிழக அரசு அதற்கு முயற்சிக்க வேண்டும். நாங்கள் அதற்கு உதவி செய்வோம். ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையின் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க முயற்சிப்பேன்'
இவ்வாறு அவர் தெரிவித்தார்.