நீட் தேர்வை இங்கிருந்தே எழுதலாமே? - கமல்ஹாசன் ட்வீட்
மருத்துவ மாணவர் சேர்க்கைகான ‘நீட்’ நுழைவுத் தேர்வு மே 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ’நீட்’ தேர்வுக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கியுள்ளனர்.
இதனால் தமிழக மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர். தேர்வு மைய ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டதால் தேர்வு மையம் மாற்றம் செய்ய முடியாது என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஎஸ்இ ஒதுக்கீடு செய்த தேர்வு மையங்களில் தமிழக மாணவர்கள் தேர்வு எழுதவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
’நீட்’ தேர்வுக்காக தமிழகத்தில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், சேலம், திருவள்ளூர், திருச்சி, வேலூர், மற்றும் திருநெல்வேலி ஆகிய 10 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பல கட்டுபாடுகள் விதித்துள்ளது.
தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டில் தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கபடாததை கண்டித்து, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்துயுள்ளனர். அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், டிஜிட்டல் யுகத்தில் இங்கிருந்தே தேர்வெழுதலாமே என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
’’இந்த டிஜிட்டல் இணையதள யுகத்தில் ஏழைத் தமிழ் மாணவர்களை கேரளத்திற்கும், ராஜஸ்தானுக்கும் நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி. இங்கிருந்தே எழுதலாமே? அதற்கு ஆவன செய்யட்டும் அரசும் ஆணையும்’’. என்று கமல்ஹாசன் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com