வண்ணாரபேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருக்கை வசதி இல்லாததால், பயணிகள் கடும் அவதி!
வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்திற்குக் கீழ் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுக்கு இருக்கை வசதிகள் இல்லாததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நெல்லை மாநகரின் மையப்பகுதியான வண்ணார்பேட்டையி பேருந்து நிலையத்தில் இருந்து சந்திப்பு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் பயணிகளுக்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பாளையங்கோட்டை, மார்க்கெட், கே.டி.சி. நகர் உள்ளிட்ட மாநகரின் கிழக்குப் பகுதிகளில் இருந்து தினசரி வேலைக்காக வண்ணார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வருபவர்கள் மாலை வேளைகளில் வீடு திரும்புவதற்காக இந்தப் பேருந்து நிறுத்தை பயன்படுத்துகின்றனர்.
இவர்கள் பாளையங்கோட்டை மார்க்கமாகச் செல்லும் பேருந்துகளுக்காகக் காத்திருக்கின்றனர். ஆனால், இந்தப் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமர்வதற்கு எந்தவித இருக்கைகளும் அமைக்கப்படவில்லை. இதனால், நாள் முழுவதும் வேலை முடிந்து களைப்புடன் வரும் பெண்கள், முதியோர் மற்றும் பொது மக்கள் நிற்க வேண்டியதுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதுமான இருக்கை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.