திசையன்விளையில் கற் விற்றவர் கைது: சீமானும் சமானியனும் வேறு வேறா?
திசையன்விளையில் கள் விற்றவர் கைது செய்யப்பட்டிருக்கும் சூழலில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி மாவட்டத்தில் கள் இறக்கும் போராட்டம் நடத்தியதும், அவர் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படாததும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் திசையன்விளை வடக்கு விஜயநாராயணம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (எ) காமாட்சி (வயது 50) என்பவர் அரசு அனுமதியின்றி கள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப் பதிவு செய்து, அவரிடமிருந்து 5 லிட்டர் கள்ளைப் பறிமுதல் செய்துள்ளார். அரசு அனுமதியின்றி கள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சில தினங்களுக்கு முன் பனைமரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கள் எங்கள் உணவு , கள் எங்கள் உரிமை என்ற முழக்கத்துடன், பனை மரத்திலிருந்து கள் இறக்கி, அங்கிருந்த கட்சித் தொண்டர்களுக்கு சீமான் கொடுத்தார். கள் தமிழர்களின் பாரம்பரிய உணவு என்றும், அது போதைப் பொருள் அல்ல என்றும் நீண்ட காலமாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்தி வருகிறது. பிற மாநிலங்களில் கள் இறக்கவும், விற்கவும் அனுமதி உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது ஏன்? என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த போராட்டம் தொடர்பாக சீமான் மீது இதுவரை எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்நாடு கள் பாதுகாப்பு இயக்கம் போன்ற அமைப்புகள், கள் என்பது போதைப்பொருள் அல்ல என்றும், அது தமிழர்களின் பாரம்பரிய பானம் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட ஊட்டச்சத்து மிக்க உணவு என்றும் வாதிடுகின்றன. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) உணவுப் பட்டியலில் கள் நேரடியாக போதைப்பொருளாக வகைப்படுத்தப்படவில்லை என்ற வாதத்தையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.
கள் என்பது பனை அல்லது தென்னை மரங்களில் இருந்து இயற்கையாகப் பெறப்படும் சாறு என்றும், அதை பதப்படுத்தும் முறையைப் பொறுத்து ஆல்கஹால் உள்ளடக்கம் மாறுபடும் என்றும் கூறுகின்றனர். டாஸ்மாக் மூலம் அரசு மதுபானங்களை விற்பனை செய்யும் போது, இயற்கையான கள்ளுக்கு தடை விதிப்பது ஏன் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
திசையன்விளையில் சாமானியர் ஒருவர் கள் விற்றதற்காக கைது செய்யப்பட்டதும், அதேசமயம் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் நேரடியாக கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததும் " சாமானியனுக்கு, ஒரு சட்டம் செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஒரு சட்டம் " என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
குறைந்த பட்சம் கள் இறக்கிய சாமானியனுக்காக நாம் தமிழர் கட்சி சட்ட நடவடிக்கைகளையாவது முன்னெடுக்குமா?