அமைச்சர் கே.என். நேரு நிகழ்ச்சியில் செல்போன் தருவதாக மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழித்தா?

நெல்லை மாவட்டத்தில் அமைச்சர் கே.என். நேரு நேற்று பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது, 15 மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் கே என் நேரு செல்போன் தருவதாக நெல்லை மாவட்ட வருவாய் துறை அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற அமைச்சர் கே.என். நேரு வழங்கிய நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சுமார் 5 மணி நேரம் அங்கு காக்க வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு செல்போன் வழங்கப்படும் என டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில், ஒரு சிலருக்கு மட்டுமே செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளது மற்றவர்களிடத்தில் டோக்கன்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அனுப்பி விட்டதாக தெரிகிறது.

இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடத்தில் கேட்ட போது, அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக, மாற்றுத்திறனாளிகள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் அளித்துள்ளனர். தங்களுக்கு செல்போன்கற் வழங்கவில்லையென்றால், கண்டிப்பாகப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரித்தனர்.

இது குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் கேட்டபோது, "கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்புச் செயலியுடன் கூடிய செல்போன் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் செல்போன்கள் அனைத்தும் அவர்களுக்கு வழங்கப்படும்" என்று விளக்கமளித்தார்.

More News >>