காவல்துறையே தாறுமாறாகக் கொலைகளைச் செய்து வருகிறது - நெல்லை அதிமுக தச்சை கணேசராஜா குற்றச்சாட்டு
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் ஒருவரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரையடுத்து, திருபுவனம் காவல்துறை அவரை கைது செய்து விசாரணை செய்துள்ளனர். அப்போது, காவலர்களின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. இதனை கண்டித்து அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை. கணேச ராஜா தலைமையில் justice for Ajit Kumar" என்ற பதாகை ஏந்தி நெல்லையில் போராட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தச்சை. கணேசராஜா கூறுகையில்,
'கோவிலின் காவலாளி, இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். கோவில் மடப்பள்ளியில் வைத்து காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உடற்கூறாய்வில், காவலாளியின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
திமுக ஆட்சியில் "காவல்துறையே தாறுமாறாகக் கொலைகளைச் செய்து வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை 25 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மரணமடைந்த காவலாளியின் சகோதரரை, திமுகவினர் திமுக கொடி கட்டிய வாகனத்தில் ஏற்ற முயன்றுள்ளனர். ஆனால் அதிமுகவினர் போராடி அவரை கீழே இறக்கிவிட்டுள்ளனர்-
இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்தது மட்டும் போதாது. அந்தக் காவலர்கள் மீது கொலை குற்ற வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் . ஒரு மனித உயிர் முதலமைச்சருக்குச் சாதாரணமாக தெரிகிறது என்று தெரிவித்தார்.