அதிமுக பெண் கவுன்சிலரை ஒருமையில் பேசுவதா? மேயரின் நாட்கள் எண்ணப்படுகிறது!- தச்சை .கணேச ராஜா காட்டம்
நெல்லையில் நடைபெறும் தேர் திருவிழாவில் பல லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வதால் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் அதிமுக நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை. கணேச ராஜா மனு அளித்துள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர் கணேச ராஜா அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ரானாவை சந்தித்து மனு ஒன்றை அளித்தார் .அதில், திருநெல்வேலியில் நடைபெறும் நெல்லையப்பர் கோவில் ஆனித் தேர் திருவிழாவில் லட்ச கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் எனவே அந்தப் பகுதியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும், தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ள பல கட்டடங்கள் இன்னும் வாடகைக்கு விடாமல் அப்படியே கிடக்கின்றன. அவற்றை, வாடகைக்கு விட முயற்சி மேற்கொள்ள வேண்டும், அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பொது மக்களுக்கு சீராக குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடத்தில் அவர் பேசியதாவது, 'முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள், தற்போதைய திமுக ஆட்சியின் கீழ் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கி கிடக்கிறது. பாளையங்கோட்டை மார்க்கெட், முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து மூன்று மாதங்களாகியும் இன்னும் பூட்டியே கிடக்கிறது. அதேபோல், டவுனில் புதியதாகக் கட்டப்பட்ட போஸ் காய்கறி மார்க்கெட், கடைகள் ஏலம் விடப்படாமல் பூட்டியே இருக்கிறது. புதிதாகக் கட்டப்பட்டுள்ள லாரி முனையமும் தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. ரஹ்மத் நகர் அருகில் ரூ. 5 கோடி செலவில் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு 8 மாதங்களான பிறகும், பயன்பாட்டில் இல்லை.
ஏழை எளிய மக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட 11 அம்மா உணவகங்கள், தற்போது மோசமான நிலையில் உள்ளன. அம்மா உணவகங்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. சமையலறைகள் படுமோசமாகி சமைக்க முடியாத அளவுக்கு இருக்கின்றன. வேண்டுமென்றே மாநகராட்சி நிர்வாகம் அம்மா உணவகங்களை மோசமான நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது. அம்மா உணவகங்களை சீரமைக்க வேண்டும்.
மாநகராட்சி கூட்டத்தில், மேயர் மற்றும் அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. அப்போது, மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், அதிமுக கவுன்சிலர் அமுதாவை ஒருமையில் பேசியுள்ளார். ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசுதான் என்றும், ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு திமுகவினருக்கு எந்த தகுதியும் இல்லை.
தற்போதைய மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பதவியேற்கும்போது எவ்வளவு சொத்து வைத்திருந்தனர். தற்போது எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார்கள் என்ற பட்டியல் எங்களிடம் இருக்கிறது. நெல்லை மாநகராட்சி ஒரு ஊழல் மாநகராட்சி. மேயரின் நாட்கள் எண்ணப்படுகிறது. அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் தற்போது வரை முடியவில்லை . இந்த மக்கள் பணியைக்கூட இவர்களால் செய்ய முடியவில்லை. பணம் வசூல் செய்வதிலேயே மாநகராட்சி குறியாக உள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். அப்போது ஊழல்கள் அனைத்தும் அம்பலப்படுத்தப்படும்'
இவ்வாறு அவர் தேரிவித்துள்ளார்.
பேட்டியின் போது, கழக அமைப்புச் செயலாளர் சுதா கே பரமசிவம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் வழக்கறிஞர் அன்பு அங்கப்பன், மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகர், அமுதா சுந்தர், ஐடி விங்க் மாவட்ட செயலாளர் சம்சு சுல்தான், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட செயலாளர் பீர் முகைதீன், விவசாய அணி மாவட்ட செயலாளர் காளி முருகன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் பிளேவின் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.