திருநெல்வேலி :முதன்மை கல்வி அலுவலருக்கு எதிராக மூலைக்கரைப்பட்டி பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தர்ணா

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் அழகுலிங்கம், தன்னை அநியாயமாகப் பணி இடமாற்றம் செய்ததாகக் கூறி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து ஆசிரியர் அழகுலிங்கம் கூறியதாவது,

'கடந்த 15 ஆண்டுகளாக மூலைக்கரைப்பட்டி பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். எனது மாணவர்கள் 100% தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளனர். ஆனால், பத்து நாட்களுக்கு முன்பு, சி.இ.ஓ சிவகுமார், எந்தவிதக் காரணமும் கூறாமல், நிர்வாக நலன் கருதி என்னை ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பணி மாற்றம் செய்துள்ளார். அதற்கான காரணங்களைக் கேட்டபோது, சி.இ.ஓ சரியான விளக்கத்தை அளிக்கவில்லை . இதையடுத்து, மதுரை உயர் நீதிமன்றக் கிளையை அணுகி தடை பெற்றேன். தடை உத்தரவு இருந்தால், பழைய பள்ளியிலேயே என்னை பணிபுரிய அனுமதிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுடன் சி.இ.ஓ-வை சந்திக்க முயன்றபோது, அவர் என்னைச் சந்திக்க மறுத்தார். சி.இ.ஓ-வின் தனி உதவியாளர், இடமாற்ற உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து ஏர்வாடி பள்ளியில் சென்று பணியில் சேர வேண்டும் என மிரட்டும் தொனியில் பேசினார்.

என்னைவிடத் தேர்ச்சி விகிதம் குறைவாக கொடுக்கும் மற்ற ஆசிரியர்களை இடமாற்றம் செய்யாமல், என்னை மட்டும் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூலைக்கரைப்படி உதவித் தலைமை ஆசிரியர் பொறுப்புக்கு சி.இ.ஓ-வின் நண்பரைக் கொண்டு வர என்னை பழிவாங்குகிறார்கள். மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் ஆணையை சி.இ.ஓ மதிக்கத் தவறியுள்ளார் 'என்கிறார்.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமாரிடம் கேட்டபோது, மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்தத் தடை ஆணையின் அடிப்படையில் அழகுலிங்கத்தை அவர் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியில் பணியமர்த்த முடியாது . அவர் மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளன. அது குறித்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

மூலைக்கரைப்பட்டி அரசுப்பள்ளி உதவித் தலைமை ஆசிரியர், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தனி ஒரு ஆளாகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>